புத்தர் குறித்த ஆவணப் படத்தை 15 மொழிகளில் மொழி பெயர்த்து, ஹைதராபாத் இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஆராய்ச்சி மையத்தின் தலைமை அறிவியல் அலுவலர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
இந்திய இளைஞர்களின் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களின் உலக சாதனை முயற்சிகளை அப்துல் கலாம் ஆராய்ச்சி மையம் ஊக்குவித்து வருகிறது. அதேபோல், ஹைதராபாத்தைச் சேர்ந்த பல் மருத்துவர் சிட்டுரி ரவிக்குமாரின் மகனான சிட்டுரி சாயி குணாநிதி பிருத்விராஜா (18) என்பவர் சாரநாத் புனித இடம் என்ற தலைப்பில் ஆவணப் படத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணப் படம் தமிழ், ஆங்கிலம், மலையாளம், குஜராத்தி, ஹிந்தி, உருது, கன்னடம், தெலுங்கு, அரபு, ஒரியா,போஜ்புரி, வங்க மொழி உள்ளிட்ட 15 மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 11 மொழிகளில் மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்ட ஆவணப் படங்களே கின்னஸ் சாதனையாக இருந்துள்ளது. சாயி குணாநிதி பிருத்விராஜா உருவாக்கி உள்ள இந்த ஆவணப் படம் எட்டு நிமிடம் 15 விநாடிகள் திரையிடக் கூடியதாகும்.
இதில், புத்தரைப் பற்றிய பல அரிய விஷயங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்றார். இந்தச் சந்திப்பின் போது பிருத்விராஜா, அவரது பெற்றோர்கள் உடனிருந்தனர். dinamani.com

0 Comments