பலுசிஸ்தானில் உள்ள கெச் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனங்களில் திடீரென IED வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் மேஜர் உட்பட 6 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பயங்கர தாக்குதலுக்கு பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. பலுசிஸ்தான் கனிமவளங்கள் அதிகளவில் நிறைந்திருக்கும் பகுதியாகும். ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லைப்பகுதியை ஒட்டி அமைந்திருக்கும் இது பாகிஸ்தான் நாட்டின் நான்கு பெரிய மாகாணங்களில் ஒன்றாகும். இந்நிலையில் அங்கு வசிக்கும் 70 லட்சம் மக்கள் தங்கள் பகுதியில் இருந்து எடுக்கப்படும், எரிவாயுக்கள் மற்றும் கனிம வளங்களுக்கு சரியான பங்குகள் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் தங்களுக்கு சுயாட்சி வேண்டும் எனவும் கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர்.
இதனிடையே இந்த பகுதிகளில் பாகிஸ்தான் அரசுடன் சேர்ந்து சுமார் 54 பில்லியன் டாலர் மதிப்பில் உட்கட்டமைப்பு, மின்சாரம் போன்றவற்றினை மேம்படுத்த சீனா திட்டமிட்டு வருகிறது. மேலும் இதன் வழியாக சீனாவின் மேற்கு சிஞ்சியாங் பகுதி முதல் பாகிஸ்தானின் குவாடார் துறைமுகத்தை இணைக்கும் சாலையை ஏற்படுத்தவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்தான் பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. ns7.tv/ta/tamil

0 Comments