Ticker

6/recent/ticker-posts

மரண தண்டனைக்கு முன் மாபெரும் விருந்து வேண்டும்; பெண் கைதியின் கடைசி ஆசை

மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் அமெரிக்க பெண் கைதி ஒருவர் மிகப்பெரிய உணவு பட்டியலை சிறை அதிகாரிகளிடம் கொடுத்து சாப்பிடத் தாருங்கள் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.


அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கெல்லி ரெனி கிசென்டானெர். தற்போது 46 வயதாகும் இந்த பெண்மணி மரண தண்டனை கைதி ஆவார்.


1997–ம் ஆண்டு கணவர் டக்ளஸ் கிசென்டானெரை கள்ளக்காதலன் கிரிகோரி ஓவனின் உதவியுடன் கத்தி முனையில் கடத்திச்சென்று கொடூரமான முறையில் கெல்லி ரெனி கொன்றார்.

பின்னர், கணவரின் காரை தீ வைத்து கொளுத்தியதுடன், உடலை எரித்து காட்டு மிருகங்கள் தின்பதற்காக அடர்ந்த காட்டுக்குள்ளும் வீசினார். எனினும் போலீசின் பிடியில் கெல்லி ரெனி சிக்கினார்.

கணவரின் பெயரில் உள்ள காப்பீட்டுத் தொகை மூலம் தனது வீட்டின் கடனை அடைக்க திட்டமிட்ட கெல்லி ரெனி, அவரை கொலை செய்து எரித்து விட்டால் அந்த பணத்தை வாங்கி விடலாம் என்று கருதி இருக்கிறார்.

ஆனால், ரெனி நினைத்த மாதிரி கிசென்டானெர் காப்பீட்டு பாலிசி எதையும் தன்மீது எடுக்கவில்லை என்பது கொலைக்கு பிறகே தெரியவந்தது.

இந்த கொடூர கொலை குற்றத்துக்காகத்தான் கெல்லி ரெனி மரண தண்டனை விதிக்கப்பட்டு அதை எதிர்நோக்கி இருக்கிறார். இவருக்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றும்படி ஜார்ஜியா மாகாண கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பொதுவாக மரண தண்டனை கைதிகளிடம் உங்களுடைய கடைசி ஆசை என்ன என்று கேட்பது எல்லா நாடுகளின் சிறைகளிலும் உள்ள வழக்கம். இதேபோல் உங்கள் ஆசை என்ன? என்று கெல்லி ரெனியிடம் சிறை அதிகாரிகள் கேட்டனர். அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவர் ஒரு நீண்ட உணவு பட்டியலையே சிறை அதிகாரிகளிடம் கொடுத்தார்.


முதலில் இந்த உணவுப்பண்டங்களை எனக்கு சாப்பிட விருந்தாக கொடுங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

அவருடைய உணவுப் பட்டியலில் இடம் பிடித்தவை வருமாறு:–
பாலாடைக் கட்டி பர்கர்–2, மிகப்பெரிய வறுவல்–2, மோருடன் கூடிய மக்காச்சோளரொட்டி, பாப்கார்ன், எலுமிச்சம் பழச்சாறு, வேக வைத்த முட்டைகளுடன் காய்கறி பச்சடி, தக்காளி, குடை மிளகாய், வெங்காயம், கேரட், பாலாடைக் கட்டி, ஆடையுடன் கூடிய மோர், செர்ரி பழத்துடன் பெரிய வெனிலா ஐஸ்கிரீம்.


வருகிற 25–ந்தேதி கெல்லி ரெனியின் இறுதி ஆசை நிறைவேற்றப்பட உள்ளது.

அன்று இவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், ஜார்ஜியா மாகாணத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படும் முதல் பெண்மணி என்ற வேதனை பட்டியலிலும் கெல்லி ரெனி இடம் பெறுவார்.

Post a Comment

0 Comments