கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியின் எஞ்சியிருக்கும் காலத்தை இரு சமூகத்தினருக்கும் பொதுவான முறையில் பங்குபோட்டுக் கொள்ளப்பட வேண்டும் என்று பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூது இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
கிழக்கில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் தற்போதைய நிலையில் தலா ஒரு தடவை வீதம் மாகாண முதலமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் தற்போது முதலமைச்சர் பதவியின் எஞ்சியிருக்கும் காலம் தொடர்பில் இரண்டு கட்சிகளும் களத்தில் இறங்கி மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
எனவே இந்நிலையில் எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தை முதலில் ஒருவருடம் ஒருதரப்பிற்கும்,பின்னர் எஞ்சியுள்ள ஒன்றரை வருடங்களை மறுதரப்பும் பெற்றுக் கொள்ளும் வகையில் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டு பகிர்ந்து கொள்வது புத்திசாலித்தனமானது. இது தமிழ் , முஸ்லிம் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த உதவும்.
மேலும் எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசும் இணைந்து போட்டியிட்டு மாகாண அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகவும் இது அமையும் என்றும் பசீர் சேகுதாவூத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தற்போதுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாகவே தற்போதைய கிழக்கு மாகாண ஆளும் தரப்பு அதிகாரத்தில் உள்ளது.
இதன் காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதவிக் காலம் முடிவடைந்து முஸ்லிம் காங்கிரசிற்கான பதவிக்காலம் கிட்டவுள்ள நிலையில் பசீர் சேகுதாவூத் முன்வைத்துள்ள கோரிக்கை சலசலப்பை உருவாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
.jpg)
0 Comments