(ஏ.எல்.எம்.சத்தார்)
பௌத்த தாய்மார் ஊட்டிய பால் குடித்தே நாம் வளர்ந்தோம். எங்களை அரவணைத்து போஷித்தவர்களும் பௌத்த தாய்மாரே. எங்களது உடலிலே ஓடிக் கொண்டிருப்பது சிங்கள இரத்தம்தான். இது எங்களது தாய் நாடு. எங்கள் தாய் மொழி சிங்களம். என்று தேசமான்ய கலீல் மௌலவி கூறினார்.
அரநாயக்க எலகிபிட்டிய மண்சரிவில் மரணமான 128 பேர்களது மூன்று மாத நினைவாக இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வியன் எலிய ரதனயோதி விகாராதிபதி தெபத்கம சோமரதர திஸ்ஸ தேரர் தலைமையில் மேற்படி விகாரையில் இடம்பெற்ற அன்னதான வைபவத்தில் மௌலவி கலீல் மேலும் கூறியதாவது;
முழு நாடுமே இந்த மண்சரிவு அழிவைக் கண்டு பெரும் சோகத்தில் மூழ்கிய நாள். இதனை நினைவு கூருவதற்கான சமயச் சடங்குகளில் கலந்துகொள்ள மதிப்பிற்குரிய தேரர் என்னையும் அழைத்திருந்தார். இன ஐக்கியத்தின் அருமையான சூழ்நிலை கண்டு மகிழ்கிறேன்.
நாம் பௌத்த மக்களுடன் மிகவும் நீண்ட காலமாக பரஸ்பரம் அன்புடன் வாழ்ந்து வருகிறோம். ஆயிரம் வருடங்களுக்கு மேலாக சகோதர வாஞ்சையுடன் இந்த நாட்டிலே வசித்து வருகிறோம்.பௌத்த மக்கள் எம்மை ‘தம்பி’ என்று விளிக்கின்றனர். இது மோசமான வார்த்தைப் பிரயோகமல்ல கூடாத வார்த்தையுமல்ல.
எமது நாட்டு முஸ்லிம்களின் ஆரம்ப வரலாற்றை சீர்தூக்கிப் பார்க்கையில் தொன்று தொட்டு அராபியர்கள் ஏலம், கராம்பு போன்ற வாசனை திரவியங்களை இங்கிருந்து கொள்முதல் செய்யவும் வைத்தியத்துறை பணிகளில் ஈடுபடவும் இங்கு வந்து போயிருக்கிறார்கள்.
இவ்வாறு வந்த சந்தர்ப்பத்திலேயே இங்குள்ள பௌத்த மகளிர்களினால் இவர்களின் பண்புகளால் கவரப்பட்டு பௌத்த பெண்களை மணந்து தொடர்ந்தும் தம் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அந்த வழித்தோன்றல்கள் மூலம் உருவானவர்கள்தான் இலங்கை முஸ்லிம் பரம்பரையினர். எனவே பௌத்த பெண்மணிகளே எமது தாய்மார் இது எமது தாய்நாடு.
எங்கள் பகுதி விகாரையிலுள்ள பிக்குமார்கள் ‘மொஹமட் கொல்லோ’ முஹம்மத் பையனே இங்கே வாரும்… என்றே அன்புடன் என்னை அழைத்த சம்பவம் இன்னும் நினைவிருக்கிறது.
இங்கு வாரும் தம்பி என்று ஆதரவுடன் விளித்த சந்தர்ப்பங்களும் உள்ளன.
நான் சிங்கள மொழி பாடசாலையில் கற்று புத்தமதத்தை ஒரு பாடமாகவும் எடுத்து பரீட்சையும் எழுதியிருக்கிறேன். அப்போதைய சந்தர்ப்பங்களில் எங்கள் பிக்கு அன்னதானம் வாங்கி புசித்து விட்டு மிகுதியை எனக்கும் சாப்பிடக் கொடுத்து, பாத்திரங்களைக் கழுவி வைக்கும்படியும் கூறுவார். நானும் அவர் சொன்னபடி செய்து முடிப்பேன்.
விகாராதிபதியும் கூட எதற்கும் என்னையே கூப்பிடுவார். அன்பு, கருணையுடனே நடந்து கொள்வார். நாமும் அப்படித்தான் இருப்போம். உனக்கு எனக்கு என்று பிரித்து சண்டையிடும் செயற்பாடு இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இல்லை.
நாம் வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகிறபோதும் தேசிய ரீதியாக நாம் அனைவரும் சிங்களவர்களே, சிங்கள நாட்டில் பிறந்த சிங்கள கோத்திரத்தினரே! இந்த எண்ணப்பாடுதான் இளம், வாலிப உள்ளங்கள் அனைத்திலும் புகுத்தப்பட வேண்டியதாகும்.
நாம் எப்போதும் இந்த நாட்டு ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்தே வாழ்ந்து வந்திருக்கிறோம். முட்டிமோதிக் கொண்ட சரித்திரமே இல்லை. சகோதரர்களே எமக்கு பௌத்த மக்கள் மீது எத்தகைய சந்தேகப்பார்வையுமில்லை. பௌத்த மக்கள் துன்ப துயரங்கள் இன்றி, நோய், நொடிகள் இல்லாமல் சுக வாழ்வு வாழ வேண்டும் என்றே அதிகாலையில் எழும்பும் மக்கள் நாம். பெரும்பான்மை மக்களுக்கு தொல்லை தொந்தரவுகள் கொடுப்பார்களா இந்த மக்கள்?
பௌத்த மக்கள் மீது எமக்கு அலாதியான நம்பிக்கை உண்டு. அதேபோன்று எமது பிக்குமார்கள் எமக்கு ஏதும் இன்னல்கள் வராது எம்மைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையும் எமக்கிருக்கிறது. அதனால் இந்த பரஸ்பர அன்பு, ஒற்றுமை பயணத்தைத் தொடர்வோம்.
இந்த பௌத்த நாட்டில் நாம் பிறந்ததை நினைத்து பெருமையடைகிறோம். இங்கு பிறந்தமை நாம் பெற்ற பெரும் பாக்கியமே!
ஏனெனில் எம்மைச் சூழ அன்பு, பண்பு, கருணை என்ற அருங்குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றால் நாம் அரவணைக்கப்படும் போது ஆயுதம் ஏந்தவா எண்ணம் வரும்? மகிழ்ச்சி அனுதாபங்களுடன் எம்மை நோக்கும் பௌத்தர்களும் எமக்கெதிராக ஆயுதம் ஏந்துவார்களா?
ஆயுதம் ஏந்தவும் மாட்டோம் அவ்வாறு எண்ணவும் மாட்டோம். ஆயுதம் ஏந்துவதற்கும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டிலே ஆயுதம் ஏந்தி எமக்குப் பெற்றுக்கொள்ள எதுவும் இல்லை.
நாம் இந்த நாட்டிலே எல்லாம் பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் எங்களுக்கிடையே உருவாகியிருக்கும் சகோதரத்துவப் பண்பை மேலும் நீடித்து வளர்த்துக் கொள்வதற்கு பிரார்த்திக்கிறேன். எங்கள் தேரரே உங்களைப் போன்ற மிகவும் சிறந்த பௌத்த தலைவர்கள் இந்நாட்டிலே உருவாகி நீண்ட காலம் வாழ வேண்டும் என்றும் பிரார்த்திப்பதோடு நாம் சிரம் தாழ்த்தி மனிதர்களை ஆசிர்வதிப்பதில்லை. அது எமது மார்க்கத்தில் தடை அவ்வாறு செய்யாவிட்டாலும் எமது உள்ளத்தால் அதைவிடவும் கூடிய பணிவு, கௌரவம் உங்களுக்குச் செய்கிறேன் என்றார்.
இவ் வைபவத்தில் அமைச்சர் நவீன் திஸாநாக்க, முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்க, ஐ.தே.கட்சியின் அரநாயக்க அமைப்பாளர் சட்டத்தரணி நிமல் ஜயசிங்ஹ, கேகாலை மாவட்டச் செயலாளர் அபே விக்கிரம வனசூரிய, அரநாயக்க பிரதேச செயலாளர் ஏ.எம்.பைஸல், உட்பட மண்சரிவு அனர்த்தத்தில் பலியானவர்களது உறவினர்கள் அடங்கிய பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். Jaffna Muslim
0 Comments