Ticker

6/recent/ticker-posts

தமிழ், முஸ்லிம் மக்கள் மீது மஹிந்தவுக்கு கோபம் உண்டு!

சர்ச்சைக்குரிய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கும் சட்டமூலத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளித்தது தெரிந்ததே.
நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இசைவான மக்கள் விடுதலை முன்னணியின் இந்தச் செயலுக்காக மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி அக்கட்சியை ‘சிவப்பு யானைக்குட்டி’ என கிண்டல் செய்தது.
குறிப்பிட்ட சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதில் தனது கட்சி கொண்டிருந்த நிலைப்பாடு பற்றி கருத்துத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட சில மாதங்களின் பின்னர் காணாமல் போனோர் தொடர்பாக அலுவலகம் அமைக்க முதன் முதலாக யோசனை கூறியது தமது கட்சிதான் எனக் கூறுகிறார்.

இது தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் வழங்கிய பதில்கள்
கேள்வி: காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கும் சட்டமூலம் மீதான மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு என்ன?
பதில்: ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய மரணம் சம்பந்தப்பட்ட விடயங்கள் தாமதமின்றி முடித்து வைக்கப்பட வேண்டும். ஆனால், காணாமல் போனோர் விவகாரத்தை அவ்வாறு கையாள முடியாது.
இறந்தவரின் பெற்றோருக்கும் குடும்பத்தவர்களுக்கும் தாங்க முடியாத துக்கமிருக்கும். காலங்களால் அவர்களுடைய மனக்காயங்கள் ஆறிவிடாது.
எனவே அது பற்றி விசாரணை செய்ய அரசாங்கத்துக்கு ஓர் கடமை உண்டு. யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற ஒரு யோசனையை முன்வைத்தோம்,
ஆனால், அப்போதைய அரசாங்கம் அதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க விசாரணை நடத்தவில்லை.தற்போதைய அரசாங்கமோ நாம் அழுத்தம் கொடுப்பதால் சில நடவடிக்கைகளை எடுக்கின்றது.
அரசாங்கம் அவசரம் அவசரமாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்றிய அதேவேளை மஹிந்த ஆதரவு அணி அதைத் தடை செய்ய முயற்சித்தது.
குழுநிலை விவாதத்தில் சபாநாயகர் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமா எனக் கேட்டபோது, சபையில் குழப்பம் ஏற்பட்டதால் பிமல் ரத்நாயக்க மூன்று திருத்தங்களில் இரண்டை மட்டுமே சமர்ப்பித்தார்.
ஆனால் விவாதம் ஆரம்பமாவதற்கு முன்பு நாம் சரியான நடைமுறையைப் பின்பற்றி மூன்று திருத்த யோசனைகளையும் சபாநாயகரிடம் கையளித்தோம்.
கேள்வி: இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட விதம் குறித்து மக்கள் விடுதலை முன்னணிக்கும் பிரச்சினைகள் ஏதும் இருக்கிறதா?
பதில்: குழு நிலையில் அது விவாதிக்கப்பட்டதால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. கடந்த அரசாங்கத்திலிருந்த சிலர் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் ராஜபக்ச குழுவினரே.
யுத்தம் முடிவுக்கு வநத பின்னரும் வெள்ளை வான் கடத்தல்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தன.இந்த கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள் தான் பாராளுமன்றத்தில் அன்றைய தினம் குழப்பம் செய்தனர்.
குறிப்பிட்ட சட்டமூலம் குறித்து விவாதிக்க நாம் எமது நேரத்தையும் தியாகம் செய்ய ஆயத்தமாகவே இருந்தோம். ஆனால், அரசாங்கத்தில் உள்ள ஊழல் கறை படிந்தவர்களும், ராஜபக்ச குழுவும் தான் எல்லாவற்றையும் குழப்பியது.
கேள்வி: சட்டமூலம் பாராளுமன்றத்தில் அவசரம் அவசரமாக நிறைவேற்றப்பட்ட விடயத்தில் சபாநாயகர் நேர்மையாக நடந்துகொண்டார் என நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில்: சபையில் அமைதியை ஏற்படுத்த, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட உறுப்பினர்களை கட்டுப்படுத்த சபாநாயகர் முயற்சி செய்தார் தான்,
ஆனால், இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலத்தின் மீது அவர் விரிவான முழு அளவிலான விவாதம் நடத்தியிருக்கலாம். இந்த விடயத்தில் அவர் தவறிவிட்டார்.
கேள்வி: இந்தப் பிரச்சினையை நீங்கள் இனி பாராளுமன்றத்தில் எழுப்புவீர்களா?
பதில்: இல்லை. ஆனால், அவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமலிருப்பதை உறுதி செய்யும்படி நாம் சபாநாயகரை கேட்டுக்கொள்கிறோம்.
கேள்வி: காணாமல் போனோர் அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலத்துக்கு ஆதரவளித்ததற்காக மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி மக்கள் விடுதலை முன்னணியை ‘சிவப்பு யானைக்குட்டி’ என கிண்டல் செய்தது. நீங்கள் அரசாங்கத்தின் வழியில் செல்வதாக அந்த அணி கூறுகின்றது. உங்களுடைய கருத்தென்ன?
பதில்: நாம் அவர்கள் கூறுவதை பாரதூரமாக கருதுவதில்லை. அவர்கள் அரசியல் ரீதியில் இடம்மாறியவர்கள். நாட்டில் உருவாகியுள்ள புதிய அரசியல் கலாசாரம் அவர்களுடனான கண்களுக்குத் தெரியாது.
ஜனநாயகத்தின் எல்லா மரபுகளையும் கெடுத்த அவர்கள் அதுபற்றி பேச முடியாது. லஞ்சம், ஊழலை பற்றி பேச முடியாது. லஞ்சம் பெற்றவர்கள் அவர்களே. நல்லாட்சி பற்றியும் அவர்கள் பேசமுடியாது.
இப்போது அவர்களுடைய கோஷம் சிங்கள தேசியவாதமே.கடந்த ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச முஸ்லிம், தமிழ் மக்களின் வாக்குகளால் தான் தோல்வியடைந்ததாகக் கூறினார்.
எனவே, முஸ்லிம், தமிழ் மக்கள் மீது அவருக்கு கடும் கோபமிருக்கிறது. எமது கட்சியோ ஜனநாயகத்துக்கு ஆதரவானது.எமது முடிவுகள் சுதந்திரமானவை.
ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடலாம். நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதாக ராஜபக்ஷவின் கண்களுக்குத் தெரியலாம். அப்படிச் சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்மொழியப்பட்டபோது, நாம் அதை ஆதரிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த இட்டுக் கட்டப்பட்ட ‘யானை கதை’ கள் எங்களுக்கு புதியவை அல்ல.ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்த 1977ம் ஆண்டு எமது தலைவர் ரோஹண விஜேவீர சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரை ஐக்கிய தேசியக் கட்சியின் கையாள் எனக் கூறியது.
யானையின் வாலாக அவரை சித்தரித்து அப்போது பத்திரிகைகளில் கேலிச் சித்திரங்கள் வெளிவந்தன. அந்த நாடகம் தான் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றது.
கேள்வி: காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலத்தில் மக்கள் விடுதலை முன்னணி திருத்தம் செய்யக் கோரிய சட்ட விதிகளின் உறுப்புகள் எவை?
பதில்: ஒன்று நேரடியாக நிதி பெற்றுக்கொள்வது தொடர்புபட்டது. ஒருங்கிணைக்கப்பட்ட நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளுமாறு தான் நாம் கூறுகிறோம்.
இல்லையென்றால் உத்தேச அலுவலகத்துக்கு நிதி வழங்கும் அமைப்புக்கள் அதன் செயற்பாடுகளில் ஆதிக்கம் செலுத்தும்.
அடுத்தது, பிடிவிறாந்து இல்லாமல் தேடுதல் நடத்த வழி செய்யும் சட்டவிதிகள், ஏனென்றால், பிடிவிறாந்து ஒன்றைப் பெற்ற பின்னர் தேடுதல் நடத்தப்பட்டால் அதற்குள் தடுப்புக்காவலில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படலாம்.
தடுப்பு முகாம்களுக்கு செல்லுமுன் அது பற்றி 24 மணித்தியாலங்களுக்குள் பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்கப்பட வேண்டுமெனவும் யோசனை கூறியுள்ளோம்.
மூன்றாவது பயிற்சி மற்றும் ஏனைய நோக்கங்களுக்காக உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அமைப்புக்களுடன் நேரடி ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள அதிகாரமளிக்கும் சட்டவிதிகள் சம்பந்தப்பட்டது.
அவ்வாறான ஒப்பந்தங்கள் செய்வதற்கான அதிகாரம் வெளிநாட்டு அமைச்சுக்கே வழங்கப்படவேண்டும். உத்தேச அலுவலகத்துக்கு நேரடியாக அதிகாரங்கள் வழங்குவதை நாம் எதிர்க்கிறோம்.
கேள்வி: உங்களுடைய திருத்த யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: நாம் மேல் நடவடிக்கை எடுப்போம். முக்கியமான ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றும்போது அரசாங்கம் தன்னிச்சையாக செயல்பட முடியாது.
கேள்வி: உங்களுடைய கட்சித் தலைவர் ரோஹன விஜேவீரவின் மரணம் உட்பட 1971 மற்றும் 1989ம் ஆண்டு புரட்சிகளின்போது காணாமல் போனவர்கள் பற்றி விசாரணை நடத்தும்படி மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுவிக்கப்போவதாக கூறப்படுகிறது. ஆனால், உத்தேச சட்டமூலமானது மிக அண்மைக்கால சம்பவங்களை விசாரணை செய்யவே முதலிடம் கொடுக்கிறது. உங்கள் கருத்தென்ன?
பதில்: சம்பவங்கள் மூன்று விதமாக பிரித்து விசாரணை செய்யப்படலாம். ஒன்று மிக நெருங்கிய சான்றுள்ள சம்பவங்கள். வழக்குக்கு வலுவான ஆதாரமுள்ள சம்பவங்கள், சர்ச்சைக்குரிய வழக்குகள். தோழர் ரோஹன விஜேவீரவின் வழக்குக்கு வலுவான ஆதாரம் இருக்கிறது.
அவர் கைது செய்யப்பட்டு பாதுகாப்புப் படையினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக அரச ஊடகங்கள் தெரிவித்தன. இதனால், மக்கள் கொதித்தெழுந்தனர்.
எனவே, அவருடைய மரணம் விசாரணை செய்யப்படலாம். ஆனால், கொலைகாரர்களிடமிருந்து எமக்கு நீதி கிடைக்குமென்று நம்ப நாம் அப்பாவிகளல்லர். எப்படியோ விசாரணை நடத்தும்படி நாம் கோரிக்கை முன்வைப்போம்.
கேள்வி: இந்த விசாரணை மக்கள் விடுதலை முன்னணியால் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்கும் பொருந்துமா?
பதில்: ஆம். அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இருந்தால் அவையும் விசாரிக்கப்படலாம். tamilwin.com

Post a Comment

0 Comments