சென்னையில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து 1½ வயது குழந்தை தவறி விழுந்து ரெயில் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தது. குழந்தையை காப்பாற்ற போராடிய தாயின் கால் துண்டானது.
கல்லூரி பேராசிரியர்
சென்னை கே.கே.நகர் வேம்புலி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 32). கல்லூரி பேராசிரியர். இவருடைய மனைவி லட்சுமி (32). இவர்களின் 1½ வயது மகள் ஏகஸ்ரீ.
சிங்காரவேலன் சில நாட்களுக்கு முன்பு தன் குடும்பத்தினருடன் சொந்த ஊரான திருவையாறு சென்றார். நேற்று முன்தினம் இரவு மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு குடும்பத்துடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.
குழந்தை தவறி விழுந்தது
இந்த ரெயில் நேற்று அதிகாலை சென்னை மாம்பலம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது மாம்பலத்தில் இறங்க வேண்டிய பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கிக் கொண்டிருந்தனர்.
அவர்களுடன் சிங்காரவேலன் தன்னுடன் எடுத்து வந்த பெட்டிகளுடன் இறங்கினார். அவருடன் வந்த உறவினர்களும் இறங்கினர். குழந்தை ஏகஸ்ரீயை தூக்கிக்கொண்டு லட்சுமி ரெயிலில் இருந்து இறங்க முயன்றார்.
அப்போது ரெயில் புறப்பட தயாரானது. இதனால் பதற்றத்தில் ரெயில் படிக்கட்டில் இருந்து இறங்கிய லட்சுமி கால் தடுமாறி தன்னுடைய குழந்தையை கீழே தவற விட்டார்.
பரிதாப சாவு
இந்த சம்பவத்தில் குழந்தை ஏகஸ்ரீ ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் விழுந்தது. அப்போது லட்சுமியின் கால் ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கியது. எனினும் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்ற லட்சுமி போராடினார். இதை கண்ட லட்சுமியின் உறவினர்களும், சக பயணிகளும் கூச்சலிட்டனர்.
அப்போது ரெயில் நகர ஆரம்பித்தது. இதனால் ‘அய்யோ காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...’ என்று லட்சுமி கதறினார். அதற்குள் தண்டவாளத்தில் கிடந்த குழந்தை ஏகஸ்ரீ மீது ரெயில் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் சிதறி ஏகஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். நடைமேடையில் சிக்கிய லட்சுமியின் ஒரு கால் துண்டானது. இதை கண்ட சிங்காரவேலனும், உடன் வந்த உறவினர்களும் கதறி அழுதனர்.
உடல் மீட்பு
இதனிடையே ரெயிலில் இருந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கால் துண்டாகி படுகாயத்துடன் இருந்த லட்சுமியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
குழந்தை ஏகஸ்ரீயின் உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். எதிர்பாராத இச்சம்பவத்தால் மாம்பலம் ரெயில் நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. dailythanthi.com

0 Comments