பெறுமதி சேர் வரியை (VAT) 15 வீதமாக அதிகரிப்பது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது.
பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், திருத்தத்திற்காக இது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திருத்தம் அங்கீகரிக்கப்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜிதன சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
எனினும், அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் பெறுமதி சேர் வரி திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்படாது என்று தெரிவித்த அவர், உரியகால அவகாசத்துடன் பாராளுமன்றத்தில் இத்திருத்தம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என்றும், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்து பெறுமதி சேர் வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் இணை அமைச்சரவைப் பேச்சாளரான ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் என்ற ரீதியில் ரவி கருணாநாயக்க முன்வைத்த பெறுமதி சேர் வரி திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. வருடாந்தம் 50 மில்லியன் ரூபாவுக்கு மேல் (காலாண்டுக்கு 12.5 மில்லியன்) புரள்வினைக் கொண்டிருக்கும் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையில் ஈடுபட்டுள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு 15 வீத பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது.
இதனைவிட, தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் நோயறிதல் சோதனைகள், இரத்த சுத்திகரிப்பு மற்றும் ஓ.பி.டி மருத்துவ ஆலோசனைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளுக்கு 15 வீத பெறுமதி சேர் வரி அறவிடப்படவுள்ளது. தொலைத்தொடர்பு சேவைகள், புகையிலை உற்பத்திகள், சீனி அல்லது ஏனைய இனிப்பு பொருட்கள் சேர்க்கப்பட்ட பால் மாக்கள், இலங்கையிலிருந்து வேறு விமான நிலையங்களுக்குச் செல்லும் விமானப் பயணிகளின் விமான டிக்கட்டுக்கள் என்பவற்றுக்கும் புதிய பெறுமதி சேர் வரி திருத்தத்துக்கு அமைய வரி அறவிடப்படும்.
4tamilmedia.com

0 Comments