Ticker

6/recent/ticker-posts

சலே, ரிலா, ரூமி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்றைய பேசுபொருளான பெயர்கள்... !

 


சலே, ரிலா, ரூமி உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் இன்றைய பேசுபொருளான பெயர்கள்... !

ரிலா, மனிதனைக் கொல்வதற்கு ஊக்கமளிக்கும் போதனைகளை வீரியத்துடன் செய்து வந்தவன் அவன். 'அபூ லிபா' என்ற ஐஎஸ்ஐஎஸ் (ISIS) அடையாளப் பெயரில் வலம் வந்த அந்த ரிலா, இன்று மண்ணையும், மண்புழுவையும் நேசிக்கும் படியாக அபூர்வமாக இயற்கை விவசாய வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறான்!
🔹
கூர்மையான கத்தியோடு மனிதர்களை வேட்டையாட வியூகம் வகுத்துக் கொண்டிருந்த ஒரு கசாப்புக்கடை சித்தாந்தவாதி, இன்று இயற்கை விவசாயம் என்ற மயிலிறகை கையில் எடுத்து மண்ணையும் மனிதர்களையும் வருட ஆரம்பித்திருக்கிறான்.
இரத்த வாடை வீசிக் கொண்டிருக்கும் தனது கரங்களை, 'இயற்கை விவசாயம்' என்ற கையுறையால் மறைத்துக் கொண்டிருக்கிறான்.
🔹
இது நடிப்பா...?
சஹ்ரானையும் அவனது குழுவினரையும் தற்கொலைத் தாக்குதல் எனும் மரணப் பொறிக்குள் தள்ளிய திரைமறைவு 'இயக்குனர்கள்' யார் என்ற கேள்வி, இந்தச் சதி அரங்கேறிய நாள் முதலே எழுப்பப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரத் தாக்குதலை நடத்தியவர்களோடு மட்டும் இந்த விவகாரம் முடிந்துபோனது என்று பலரும் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
🔹
செத்துப் போன சஹ்ரானிய நாசகாரிகளின் உடல்களை மண்ணுக்குள் புதைத்ததோடு சூழ்ச்சிகள் எல்லாம் முடிந்துவிட்டது என்றே சாமானியர்கள் நினைத்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், உண்மை அதுவல்ல!
பேரழிவை ஏற்படுத்திய இந்த கொலைக்களத்தை புலனாய்வுப் பிரிவுகளுடன் இணைந்து வடிவமைத்த முக்கிய சூத்திரதாரிகள் சிலர், சட்டமா அதிபரின் மாபெரும் 'புண்ணியத்தில்' குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
🔹
'அபூ மஸ்லமா' என்ற பெயரில் இயங்கிய ரூமி என்ற நபர், ஒருபுறம் சஹ்ரானோடும், மறுபுறம் அதிகார மையங்களின் புலனாய்வுக் கட்டமைப்புகளோடும் ஒரே நேரத்தில் தொடர்புகளைப் பேணிய ஓர் இரட்டை முகவராக (Double Agent) இருந்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் அப்போதே கசிந்தது.
கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் விசாரணைகளில், சலே உடனான ரூமியின் நிழல் உலகத் தொடர்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
ரூமி ஒரு வருட காலம் தடுப்புக் காவலில் இருந்தபோது, அவனது குடும்பத்திற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவு பொருளாதார உதவிகளை வழங்கியதாகவும், அவனது மகனுக்கு புலனாய்வுப் பிரிவிலேயே வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
🔹
அதுமட்டுமன்றி, தான் கைது செய்ய நேரிட்டதற்காக சலே, ரூமியிடம் மன்னிப்புக் கோரியதாகவும் நீதிமன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவோடும் சஹ்ரானோடும் மிக நெருக்கமாகப் இணைந்து செயற்பட்ட ரூமி, 2019 ஏப்ரல் 25 அன்று கைது செய்யப்பட்ட போதிலும், 2020ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தின் உத்தரவின் பேரில் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டான்.
இதேபோல், 'அபூ லிபா' என்ற ரிலாவின் அண்மைய விடுதலையையும் நாம் அத்தனை எளிதாகக் கடந்துவிட முடியாது.
🔹
தாக்குதலை நேரடியாக நடத்துவோரை விட, அதற்குப் பின்னணியில் இருந்து இளைஞர்களின் மனங்களில் நஞ்சை விதைத்து, தீவிரவாதச் சிந்தனைக்குத் தளம் அமைத்துக் கொடுத்த 'ரிலா' போன்ற சித்தாந்தவாதிகளே சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள்.
இத்தகைய பின்னணிச் சூத்திரதாரிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்புவது, எதிர்காலத்தில் இத்தகைய நச்சுச் சிந்தனைகள் மீண்டும் முளைவிடுவதற்கான சமூக இடைவெளியை நிச்சயம் உருவாக்கிவிடும்.
🔹
இத்தகைய பயங்கரக் குற்றவாளிகள் சட்ட மா அதிபரின் வேண்டுகோளின் பிரகாரம், நீதிமன்றத்திற்கும் மேலாக உத்தரவிடப்பட்டு குற்றமற்றவர்களாகச் சித்திரிக்கப்பட்டு வெளியே வருவதைப் பார்க்கும் போது, சதிக்கோட்பாட்டு சித்தாந்தம் இன்னும் இந்நாட்டில் இயங்கு நிலையில் இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது..
அது மட்டுமல்ல..,
போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்காமல் தவிர்ப்பது, வேண்டுமென்றே குற்றவாளிகளுக்கு எதிரான வலுவான சாட்சியங்களை மறைப்பது, அல்லது வழக்கை வேண்டுமென்றே பலவீனமான முறையில் வடிவமைப்பது எனப் பல வழிகளில் குற்றவாளிகள் தப்புவதற்கான வழிகள் சமைக்கப்படுகின்றன.
சிலவேளைகளில், சட்ட மா அதிபர் சில தொழில்நுட்பக் காரணங்களைக் காட்டி வழக்கை விலக்கிக் கொள்ளும்போது, இந்தக் கொலையாளிகள் புனிதர்களாக வெளியே வருகிறார்கள்.
🔹
இந்த விவகாரத்திலும், சட்டமா அதிபர் அலுவலகத்தின் உத்தரவின்படி ரிலாவும் ரூமியும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் ரூமி, அரச தரப்புச் சாட்சியாளராக மாறி சலேக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.
ரிலாவின் விடுவிப்பு நாடகமும் இதே இலக்கை நோக்கித்தான் நகர்வதாகத் தெரிகிறது. இந்தத் திரைக்கதை அப்படியே நகர்ந்தால், மூன்று குற்றவாளிகளில் சலே என்ற ஒற்றை நபர் மட்டும் தண்டிக்கப்பட்டு, ஏனைய இரு குற்றவாளிகளும் சமூகத்திற்குள் உத்தமர்களைப் போல உலா வரத் தொடங்குவார்கள்.
அதுமட்டுமன்றி, எதிர்காலத்தில் மற்றுமொரு சதிக்கோட்பாட்டுக்கு இவர்கள் மீண்டும் கருவியாகப் பயன்படுத்தப்படுவார்கள் என்பதில் ஐயமில்லை.
🔹
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில், ரிலா பற்றி வெளிவந்த வாக்குமூலங்களுக்கு இப்போது என்ன பெறுமதி இருக்கிறது?
👉 2018 ஆகஸ்ட் 27 அன்று, வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தபோது சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் படுகாயமடைகிறான். றிழ்வானை கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக சவுதியிலிருந்து ரிலா வியூகம் வகுத்தது ஏன்? (மாவனெல்லை சிலை உடைப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய) 'எம். ஐ. ஷாஹித்' என்ற போலிப் பெயரைப் பயன்படுத்தி, தனது நண்பனான டொக்டர் சஃப்ராஸின் உதவியுடன் காவல் துறையின் கண்களுக்கு மண்ணைத் தூவி றிழ்வானுக்கு சிகிச்சை அளிக்க ரிலா துடியாய்த் துடித்ததன் பின்னணி என்ன?
👉2018 டிசம்பர் மாதம் சிகிச்சை முடிந்ததன் பின்னர், ரிலாவும், சஹ்ரானும், றிழ்வானும் மற்றுமொரு அடையாளம் தெரியாத நபரும் தெஹிவளை எபநேசர் பிளேஸில் உள்ள டொக்டர் சஃப்ராஸின் வீட்டுக்குச் சென்று, அவருக்கு 2.5 இலட்சம் ரூபாயைச் சன்மானமாக வழங்கியது ஏன்?
👉அன்று டொக்டர் சஃப்ராஸின் வீட்டிற்கு அவர்கள் சென்றபோது, அவர்களோடு நான்காவதாகச் சென்ற அந்த "மர்ம நபர்" யார்? அவர் எந்தப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்? அவருக்கும் ரிலாவுக்குமான அந்தரங்கத் தொடர்பு என்ன?
👉 அரசியல் சூழ்ச்சியினால் உருவாக்கப்பட்ட “மைத்திரி - மஹிந்த 52 நாள் ஆட்சி”க் காலத்தில், விடுதலைப் புலிகள் மீண்டும் எழுச்சியடைந்துவிட்டதாகவும், நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டதாகவும் ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குவதற்கான தேவை இந்த சூழ்ச்சிக் காரர்களுக்கு இருந்தது.
இதன் தேவைக்காக வவுணதீவு பொலிஸ் காவலரண் மீது ஒரு கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. உயிர்த்த ஞாயிறு பேரழிவை

வடிவமைத்த அதே சதிக்கோட்பாட்டாளர்களே இதையும் திட்டமிட்டனர். மில்ஹான், கபூா் மாமா போன்ற சஹ்ரானின் கும்பலே இந்த தாக்குதல் நாடகத்தை அரங்கேற்றியது.
🔹
இதில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அவா்களின் ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டன.
இந்தப் படுகொலையை முன்னின்று அரங்கேற்றியவன் காத்தான்குடியைச் சேர்ந்த மில்ஹான். இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இணைந்து செயற்பட்டவன். பொலிஸாரைக் கொன்றுவிட்டுச் சவுதிக்குத் தப்பியோடிய அந்தப் பயங்கரவாதி மில்ஹானுக்கு, சவுதியில் உள்ள தனது வீட்டிலேயே ரிலா புகலிடம் கொடுத்ததை எந்த சட்டத்தால் நியாயப்படுத்த முடியும்?
இத்தனை பாரிய குற்றச்சாட்டுகளும், சான்றுகளும் உத்தியோகபூர்வமாகப் பதியப்பட்டிருந்தும், ரிலா என்ற பயங்கரவாதச் சித்தாந்தவாதியை சட்டமா அதிபர் திணைக்களம் எந்த அடிப்படையில் அத்தனை எளிதாக விடுவித்தது?
முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அவர்கள் ஓய்வுபெறும் போது, "ஈஸ்டர் தாக்குதல் என்பது ஒரு பாரிய சதித்திட்டம் (Conspiracy)" என்று உடைத்துக் கூறியதன் ஆழமான அர்த்தம் இதுதானோ?
இதற்கான பதிலை இந்த நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டிய கடப்பாடு சட்டமா அதிபருக்கு இருக்கிறது! #ShareThisPost
🔹
22.06.2026
05.40pm

Post a Comment

0 Comments