கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக பாரபட்சமின்றி விசாணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான நடராசா ரவிராஜ், தியாகராஜா மகேஸ்வரன், ஜோசப் பரராஜசிங்கம், பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடைபெறுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருப்பதை நாம் வரவேற்கின்றோம்.
அதேவேளை, விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய இன்னும் பலரது படுகொலைகள் கடந்த காலங்களில்; நடந்துள்ளன. இவற்றில் முன்னாள் அமைச்சரான லக்ஸ்மன் கதிர்காமர், பாராளுமன்ற உறுப்பினர்களான அம்பாறை சந்திரநேரு, திருமலை தங்கத்துரை, நீலன் திருச்செல்வம், தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல.எப் உறுப்பினரும், இலங்கை சமாதான செயலகத்தின் உத்தியோகத்தருமான லோகநாதன் கேதீஸ்வரன், பத்திரிகையாளர்களான அற்புதராஜா நடராஜா, பா.உ பாலநடராஜா ஐயர், தராகி சிவராம், நிமல்ராஜன், நாபா அணியின் தலைவர் சுபத்திரன், மனித உரிமைகள் சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் கொலைகள் தொடர்பாகவும் பாரபட்சமற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். இவர்களும் தாம் கொண்டிருந்த அரசியல் நிலைப்பாடுகள் காரணமாகவும், கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
இவர்களின் கொலைகளோடு சம்மந்தப்பட்டவர்கள், கொலையை தூண்டிவிட்டவர்கள் தொடர்பாக இவர்களை இழந்த உறவுகளுக்கு ஏமாற்றங்களும், சந்தேகங்களும் இருக்கவே செய்கின்றது.
எனவே அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் முன்னெடுக்கும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் பரந்தளவில் பாரபட்சமின்றி முன்னெடுக்கப்பட வேண்டுமென உறவுகளை இழந்தவர்கள் சார்பாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கேட்டுக் கொள்கின்றது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments