கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், மிரட்டல்கள் உட்பட அனைத்து குற்றச்செயல்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவே காரணம் என 'நல்லாட்சிக்கான சட்டத்தரணிகள்' அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையில் 2012 நவம்பரில் இடம்பெற்ற கலவரங்களுக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அந்த அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.இந்தச் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சட்டத்தரணி சேனக பெரேரா- நவம்பர் 2012 இல் வெலிக்கடையில் நடைபெற்ற கலவரங்களை நியாயப்படுத்துவதிலேயே அதிகாரிகள் இதுவரை ஈடுபட்டுள்ளனர். ஏன் இந்த சம்பவங்கள் இடம்பெற்றன? யார் இதற்கு காரணம் என எந்த வித விசாரணைகளும் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், அச்சுறுத்தல்கள், குற்றச்செயல்கள் அனைத்திற்கும் கோத்தபாய ராஜபக்ஷவே பொறுப்பு. அவரின் ஆசீர்வாதத்துடனேயே அவை அனைத்தும் இடம்பெற்றன. இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறையிடப்போகின்றோம் - எனத் தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலை கவலரம் நடைபெற்றவேளை உள்ளேயிருந்த சுதேஷ் நந்திமல் என்பவர் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்த படையினர் தங்களை தாக்கினர் என குற்றஞ்சாட்டினார். உள்ளே என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதற்காக எந்த நீதிமன்றமும் செல்வதற்கு தயார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 Comments