Ticker

6/recent/ticker-posts

ரிஸானாவின் விடுதலைக்காய் போராடியவர் மஹிந்த ராஜபக்‌ஷ: மசூர் மௌலானா

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி றிஸானாவை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். குடும்ப வறுமை தலை விரித்தாடியதன் காரணமாக சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்று தனது உன்னத உயிரை அர்ப்பணம் செய்த றிஸானா நபீக் எமது தேசத்தின் புதல்வியாக இன்றுகளில் நாட்டு மக்கள் எல்லோரது இதயங்களிலும் சிலாகிக்கப்படுகிறார்.
இனம்,மதம்,மொழி கடந்து சகோதரி றிஸானாவின் மரணம் எல்லோரது
மனங்களையும் வெகுவாக பாதித்தது. சிங்கள மற்றும் தமிழ் மக்கள் றிஸானாவுக்காக கண்ணீர் விட்டழுதனர்.
மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசு றிஸானாவை மரண தண்டனையில் இருந்து பாதுகாக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டதையும் யாரும் மறக்க முடியாது.நாட்டில் கோரத் தாண்டவமாடிய யுத்தம் கூட றிஸானா போன்ற அப்பாவி ஏழைகள் பலர் வெளி நாடு சென்று அங்கு சொல்லொண்ணா துன்பங்களை எதிர் நோக்க வழிவகுத்தது.
சகோதரி றிஸானா,திருகோணமலை மாவட்டத்தில் மூதூரில் ஒரு ஒதுக்குப்புறமாகவுள்ள ஷாபிநகரில் 1988 பெப்ரவரி 02ஆம் திகதி பிறந்தார். ஷாபிநகர் கிராமம் ஒரு விவசாயக் கிராமமாகும். கிராமத்து எல்லைக்கு அப்பால் மாவிலாறின் கிளையாறு ஒன்றும் ஓடுகிறது. யுத்தகாலத்தில் அப்பகுதிகளுக்குச் சென்று இவர்களால் விவசாயம் செய்யவோ மற்றும் ஜீவனோபாய பயிர்செய்கைகளில் ஈடுபடவோ முடியாத நிலையில் இருந்தனர். இதனால், வறுமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் றிஸானா சவூதிக்கு பணிப்பெண்ணாய் சென்றார்.
வெளியுலகம் பரிச்சயமில்லாத ஒரு அப்பாவி பிள்ளையாக றிஸானா சவூதி மண்ணில் தத்தளித்தார். ஒரு குழந்தையை பராமரிக்கும் அளவுக்கு றிஸானாவுக்கு அனுபவம் இருக்கவில்லை. அதனால், றிஸானா பராமரித்த எஜமானியின் குழந்தை ஏதோ ஒரு காரணத்தால் மரணித்தது.
சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களுக்கு 2006ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ,றிஸானாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரும் கடிதமொன்றை அனுப்பினார். அக்கடிதம் றியாத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் மன்னருக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக ஆராய்ந்த மன்னர் உள்துறை அமைச்சின் ஊடாக வீட்டு எஜமானருக்கு இது தொடர்பாக தெரியப்படுத்தினார். ஆனால், ஜனாதிபதி மேற்கொண்ட சகல முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.
றிஸானாவை பாதுகாப்பாக நாட்டுக்கு மீட்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்துக் கொண்ட முயற்சிகள் பல. இதற்காக, மஹிந்த ராஜபக்‌ஷ அரசு பல மில்லியன் ரூபாய்களை செலவழித்தது.மேலும், மரணித்த அந்த குழந்தையின் பெற்றொருக்கு நஷ்ட ஈட்டு தொகையாக 390 மில்லியன் blood money எனும் இரத்தப் பணம் கொடுக்கவும் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் தயாராக இருந்தார்.
சகோதரி றிஸானாவை பல மில்லியன் கொடுத்தாவது சவூதி சிறையில் இருந்து விடுதலையாக்க அரசாங்கம் முன்னெடுப்புகளை மேற்கொண்ட போது எதிர்க்கட்சியினரான ஐ.தே.க. வினர் அதற்கு பல்வேறு எதிர்ப்புகளை வெளியிட்டனர். அரச பணத்தை இப்படி வீணாக செலவழிக்க வேண்டாமென கூக்குரலிட்டனர். மனிதாபிமானம் அன்று மரித்துப் போனது.
ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ மனித நாகரிகத்துடனும், இனவாதமற்ற காருண்யத்துடனும் எமது தேசத்தின் புதல்வி றிஸானாவின் விடயத்தில் நீதி நேர்மையாக செயற்பட்டதை முஸ்லிம்களாகிய நாம் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் ஒரு இனவாதியென்றால் முஸ்லிமான அப்பாவி ஏழைப்பிள்ளையான றிஸானாவை காப்பாற்ற இத்தனை முயற்சிகளை எடுத்திருக்க மாட்டார். மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் இரக்கமும் கருணையும் மிக்கவர். அதனால், றிஸானாவை மரண தண்டனையில் இருந்து மீட்டு வர இலங்கையில் இருந்து பல பிரதிநிதிகளை சவூதிக்கு அனுப்பியதோடு, இரண்டு தடவைகளுக்கு மேல் அந்த குழந்தையின் பெற்றோருக்கு மன்னிப்புக் கோரும் கடிதங்களையும் ஜனாதிபதி அனுப்பி இருந்தார்.
தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ போல,இன்று முஸ்லிம்களின் தலைவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் எவரும் றிஸானாவை மரண தண்டனையில் இருந்து பாதுகாக்க இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்பதை இவ்வேளையில் மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று சகோதரி றிஸானாவின் மரணச் செய்தியைக் கேட்டு அனுதாப அறிக்கைகளை வரைவதற்கு நேரம் கடத்திய முஸ்லிம் அரசியல் தலைமைகள், றிஸானா சிறையில் அடைக்கபட்டிருந்த- றிஸானாவின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்த கடந்த 7 வருட காலத்தில் சவூதிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பயணங்களை மேற்கொண்டிருப்பார்கள். பல வாரங்கள் அங்கே தங்கியிருந்தவர்களும் உண்டு.
அப்படியான சூழலில், அதில் எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் மரணித்த குழந்தையின் பெற்றோர்களை முறையாகச் சந்தித்து றிஸானாவின் நிலை பற்றி எடுத்துக்கூற முன்வரவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ ஒரு பெரும்பான்மை இனத்தவராக இருந்தும் றிஸானாவை விடுதலையாக்கி தேசத்திற்கு அழைத்து வர வேண்டுமென்பதில் இதய சுத்தியுடனும் காருண்யத்துடனும் அயராது பாடுபட்டார் என்பதை முஸ்லிம்கள் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.
இலங்கை அரசும்,மஹிந்த ராஜபக்‌ஷ சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களிடம் பல சந்தர்ப்பங்களில் கடிதம் ஊடாகவும், தூதுக் குழுக்கள் ஊடாகவும் றிஸானாவை சிறையில் இருந்து மீட்கும் பல்வேறு சமரசப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். மதிப்புக்குரிய மன்னர் அப்துல்லாஹ் அவர்களும் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்று றிஸானாவின் விடுதலைக்காய் தன்னாலான சகல முயற்சிகளையும் செய்த போதும், குழந்தையின் பிரிவினால் கடும் விரக்தியுற்றிருந்த அந்த தாயின் மன்னிப்புக் கிடைக்காத காரணத்தால் கடைசி நேரத்தில் எல்லாமே கை நழுவிப் போனது.
இருந்த போதும், தொடர்ச்சியாக ஜனாதிபதி தரப்பில் இருந்து றிஸானா விடுதலை குறித்த அழுத்தங்கள் சவூதி அரசுக்கு அடிக்கடி விடுக்கப்பட்டதன் காரணமாகவே றிஸானாவுக்கான மரண தண்டனை 7 வருடங்களாக தள்ளிப் போனது என்பதை இவ்வேளையில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
சகோதரி றிஸானா விடுதலையாவதற்காக இருந்த ஒரேயொரு துரும்பு சீட்டு மரணித்த குழந்தையின் பெற்றோர்கள் கொடுக்கும் மன்னிப்பிலேயே தங்கியிருந்தது. ஆனால், அன்று பல தடவைகள் தனிப்பட்ட விஜயங்கள் மற்றும் பல ஹஜ்,உம்றாக்கள் சென்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் நமது உம்மத்து என்ற வகையில் றிஸானாவை பாதுகாக்க எந்தவொரு தனிப்பட்ட பிரயத்தனங்களையும் எடுக்கவில்லை.றிஸானாவை மரணப் பிடியில் இருந்து விடுதலை பெறச் செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களும் அரசாங்கத்தின் ஒரு சில சிரேஷ்ட அமைச்சர்களுமே அரும்பாடுபட்டார்கள்.
அமைச்சர் டிலான் பெரேரா பாராளுமன்றத்தில் றிஸானாவின் மறைவு குறித்து வேதனையுடன் பேசுகையில், அரசாங்கம் எடுத்த சகல முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துவிட்ட போதிலும் எவ்வாறாயினும் நாம் றிஸானாவின் குடும்பத்தை கைவிட மாட்டோம் என்று அன்று கூறியது றிஸானாவின் மறைவினால், வேதனையில் மூழ்கிய அனைவருக்கும் மன ஆறுதலை கொடுப்பதாக இருந்தது.
றிஸானாவை பாதுகாக்க நான் ஒரு தனி மனிதனாக மேற்கொண்ட முயற்சிகளையும் அதற்காய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எனக்கு வழங்கிய ஒத்துழைப்புகளையும் இந்த தருணத்தில் ஆத்மார்த்தமான நன்றிகளுடன் நினைவு கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருடனும், அங்குள்ள கோத்திரத் தலைவர் முஹம்மத் ஹுமைதி அல் ஒதைபீ, கோத்திரத்தின் உப தலைவர் பைஸல் ஹுமைத் அல் ஒதைபீ ஆகியோரைச் சந்தித்து நான் பல சமரச முயற்சிகளில் ஈடுபட்டேன். இந்தச் சந்திப்பிலே என்னுடன் கௌரவ மேல் மாகாண ஆளுனர் அலவி மௌலானா, சவூதியின் அன்றைய இலங்கைக்கான தூதுவர் ஜாவீட் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்
.ஆனால், மரணித்த குழந்தையின் தாயினால் எங்களது எந்தவிதமான சமரசங்களும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இறுதியில் நாம் றிஸானாவை நாம் பறி கொடுக்க நேர்ந்தது. எனவே, நாம் அல்லாஹ்வின் தீர்ப்பை நாம் பொருந்திக் கொண்டோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, றிஸானா என்னுடைய மகள் போல என்று பல தடவைகள் சொல்லியதோடு, அந்தப் பிள்ளையின் விடுதலைக்காய் ஒரு ஜனாதிபதி என்பதையும் தாண்டி ஒரு மனித நேயமிக்கவராக செயற்பட்டதை தனிப்பட்ட ரீதியில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
உண்மையில், நாட்டில் முஸ்லிம்களை நேசிக்கும் ஒரு சீரிய தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ அவர்கள் எமக்கு தந்த சலுகைகளை,உரிமைகளை நாம் ஒரு தரம் நினைவில் கொள்ள வேண்டும். முஸ்லிம் விரோதியென்றால்,றிஸானா எனும் சகோதரிக்காய் அவர் கண்ணீர் சிந்தியிரூக்க மாட்டார்.
எமது முஸ்லிம் அரசியல்வாதிகள் வெறுமனே ஒரு அனுதாப அறிக்கையோடு மௌனமானார்கள். ஆனால், ஜனாதிபதி றிஸானா எனும் எமது தேசத்தின் பிள்ளைக்காய்- அந்தப் பிள்ளையின் விடுதலைக்காய் முழு மூச்சுடன் நின்று போராடினார்கள். இது அரசியலுக்காய் அல்ல, மனிதாபிமானம் எனும் மகத்தான உணர்வின் ஊடான வெளிப்பாடே இதுவாகும்.
அரசியலைத் தாண்டிய ஒரு சிறப்பான மனிதம் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் நிறைந்திருக்கிறது. உண்மையான முஸ்லிம் விரோதப் போக்கை உடையவர்களின் இன்றைய நிரந்தர இருப்பிடம் எதிரணியின் கூடாரமே என்பதை முஸ்லிம்கள் நன்கு உணர வேண்டும்.
எனவே, முஸ்லிம்களாகிய நாம் நமக்கான எதிரி யார்? உற்ற தோழன் யார்? என பிரித்தறிந்து பார்க்க வேண்டும். பாலும் தண்ணீரும் எதுவென்று அன்னம் பிரித்தறியும்தான். ஆனால், நாம் கபடங்களுடன் களமிறங்கியிருக்கும் இந்த அன்னத்தின் இன விரோத எண்ணத்தை முற்றாக தோற்கடிக்க வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மென்மேலும் முன்னேற வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களை ஏகோபித்து ஆதரிப்பதின் மூலமாகவே அது சாத்தியப்படும். சகோதரி றிஸானாவை போல் நாம் இன்னுமொரு றிஸானாவை பாலைவன தேசத்தில் னாம் பறி கொடுக்க முடியாது.
றிஸானா எனும் சகோதரிக்காய், அவரது விடுதலைக்காய் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எடுத்துக் கொண்ட பகீரத பிரயத்தனங்களை நான் இங்கு ஒரு அரசியல் நோக்கம் கருதி சொல்லவில்லை. ஒரு மனித நேயமிக்க தலைவரின் உச்சக்கட்ட மனித நேயமும், உளப்பாங்கு குறித்தும் முஸ்லிம்களாகிய நாம் உணர்ந்து, சிந்தித்து செயற்படவே இவ்விடயத்தை ஞாபகப்படுத்துகிறேன்.
எனவே, தேவையற்ற சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நன்றி மறந்த ஒரு சமூகமாக நாம் மாறி விடக் கூடாது. இருப்பவர்களில் சிறப்பானவர் யாரென்பதை முஸ்லிம்கள் ஆழமாக சிந்தித்து உணரும் உன்னத தருணம் இதுவாகும்.
அரசியல் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படும் சமூகமாக முஸ்லிம்கள் ஒரு போதும் இருந்து விடக் கூடாது. ஜனாதிபதி அவர்களுடன் நெருக்கமாக பழகியவன் எனும் அடிப்படையில் றிஸானாவின் விடுதலை விடயத்தில் எடுத்துக் கொண்ட கரிசனை, சிரத்தை என்பன அவரது பரந்த மனதையும் இரக்க குணத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
எனவே,என் மனதில் இருந்த உண்மைகளை இத்தருணம் உங்களுக்கு வெளிப்படுத்தி இருக்கிறேன். ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போல ஒரு மனிதரின் சிறப்பான அத்தியாயங்கள் புரட்டிப் பார்க்கப்பட வேண்டும்.
விமர்சனங்களைத் தவிர்த்து எமது சமூகத்தின் எதிர்கால விமோசனத்திற்காய் நாம் ஒற்றுமையுடன் செயற்படுதல் எமக்கு முன்னிருக்கும் பாரிய பொறுப்பாகும். பிரிவினைவாதிகளின் பின்னால் திரண்டு மீண்டுமொரு தடவை இலங்கை முஸ்லிம்கள் கை சேதப்பட்டவர்களாக ஆகிவிடக் கூடாது என்பதே சமகால அரசியல் யதார்த்தம் புரிந்தவர்களின் ஒருமித்த கருத்தாகும்.
ஆதலால், இன்று ஆசியாவில் எழில் ஜொலிக்கும் மாணிக்கக் கல் போன்று இலங்கை மிளிர்கிறது. 1990 – 1991களில் 21 வீதமாக இருந்த வறுமை 5 வீதமாக குறைந்துள்ளது. சகல இன மக்களுக்குமான பொருளாதார வளர்ச்சியுடன் கூடிய சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெகு சிறப்பாக முன்னெடுத்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
அன்பானவர்களே! அல்லாஹ்வின் நாட்டத்தை முன்னிறுத்தியவர்களாய், மனச்சாட்சியுடன் தூய்மையாய் பேசி ,எமது நாளைய ஆரோக்கியமான எதிர்காலத்தை தீர்மானிப்போம்.
தேசம் மலர வேண்டுமாயின் நல்லாட்சி தொடர வேண்டும். வறுமை நீங்கி வளமான தேசத்தில் நாம் வாழ வேண்டுமாயின் தேசத்தின் உண்மையான மகிழ்ச்சியிலும் வெற்றியிலும் பங்காளராய் மாறிடுவோம்.
- அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத் திட்டத்தின் தலைவர்,
ஜனாதிபதியின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகர்.

Post a Comment

0 Comments