Ticker

6/recent/ticker-posts

‘மாதொருபாகன்’ நாவல் விவகாரம்: பெருமாள்முருகன் நீதிமன்றத்தில் முறையிடலாம் - உயர் நீதிமன்றம் கருத்து


‘மாதொருபாகன்’ நாவல் ஆசிரியர் பெருமாள்முருகன், நீதிமன்றத்தில் முறையிட விரும்பினால் வரட்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
எழுத்தாளர் பெருமாள் முருகன், 2010-ம் ஆண்டு எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலின் ஒரு பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் நடத்தப்பட்ட அமைதிக் குழு கூட்டத்தில், நாவலில் சர்ச்சைக்குரிய பகுதியை நீக்கி விடுவதாகவும், இதுவரை விற்காத நாவல்களை திரும்பப் பெறு வதாகவும், இனிமேல் எதையும் எழுதுவதில்லை என்றும் பெருமாள் முருகன் உறுதி அளித்தார். இந்நிலையில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத் தலை வர் தமிழ்செல்வன், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்த அமைதிக் குழுக் கூட்டத்தில் நாவல் ஆசிரி யர் பெருமாள்முருகனை நிர்பந் தித்து எடுக்கப்பட்ட முடிவு சட்ட விரோதம் என அறிவித்து, அதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘நாவல் ஆசிரியர் பெருமாள்முருகனை அணுகி மனு தாக்கல் செய்யவோ அல்லது அவர் சார்பில் வழக்கை நடத்துவதற்காக ஒப்புதலோ (வக்காலத்து) பெறப்படும்’’ என்று தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள் கூறு கையில், ‘‘இந்த விவகாரத்தில், உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும், குறிப்பிட்ட சிலர் சேர்ந்துகொண்டு ஒருவரது பேச்சுரிமை, எழுத்துரிமை பற்றி முடிவெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
எனவே, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முறையிட விரும்பினால் பெருமாள்முருகன் வரட்டும்’’ என்று தெரிவித்தனர்.
பின்னர், வழக்கு விசாரணையை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Post a Comment

0 Comments