மத்திய கிழக்கின் புவியரசியல் பதற்றங்களுக்கு காரணமான இஸ்ரேல் ஈரானுக்கு இடையேயான அணு ஆயுத சர்ச்சை, போராக வெடித்து உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்க நலனை பாதுகாக்கும் அத்தனை நாடுகளும், அமெரிக்க இஸ்ரேல் கூட்டணியில் இணைந்து தமது ”அரசியல்” காய்களை அழகாக நகர்த்தி வருகின்றன.
ஈரான் மீது சுமத்தப்பட்டுள்ள அணு ஆயுத குற்றச்சாட்டு காரணமாக #2006ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மீது, இந்த எதேச்சதிகார சக்திகள் பலத்த பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இரண்டு தசாப்த கால தடைகளுக்கு மத்தியில்தான் ஆயுத உற்பத்தியில் அந்த நாடு எழும்பி வந்திருக்கிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கக் கூடாது என்று இஸ்ரேலும், மேற்குலக நாடுகளும் கடுமையாக எச்சரித்து வந்தன. இதேவேளை இஸ்ரேல் தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது. இது உலக எதேச்சதிகார சக்திகளின் வெளிப்படையான முரண்பாட்டையும், நேர்மையற்ற தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
இஸ்ரேல், தனது அணு ஆயுதத் திட்டம் குறித்து வெளிப்படைத் தன்மையற்ற Policy of Ambiguity என்ற ஒரு விசித்திரமான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அதாவது, தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், 1960களிலேயே பிரான்சின் உதவியுடன் டிமோனா (Dimona) என்ற இடத்தில் அணு உலையை நிறுவி, அதன் மூலம் அணு ஆயுதங்களைத் தயாரித்து விட்டது என்பது சர்வதேச ஆய்வாளர்களால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு "இரகசியம்" ஆகும்.
இஸ்ரேலிடம் சுமார் 80 முதல் 400 வரையிலான அணு ஆயுதங்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, இஸ்ரேல் இன்றுவரை அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (Nuclear Non-Proliferation Treaty - NPT) கையெழுத்திடவில்லை. இதனால், சர்வதேச அணுசக்தி முகமையகத்தின் (International Atomic Energy Agency - IAEA) ஆய்வுகளுக்கும், கண்காணிப்புக்கும் அதன் அணுசக்தி மையங்கள் உட்படவில்லை. எந்தவிதமான சர்வதேசக் கட்டுப்பாடுகளுக்கும், பொருளாதார தடைகளுக்கும் உட்படாமல், ஒரு பிராந்திய அணு ஆயுத வல்லரசாக வளர்வதற்கு இஸ்ரேலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மறுபுறம், ஈரானின் அணுசக்தித் திட்டம் ஆரம்பம் முதலே சர்வதேசத்தின் கடுமையான கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டது. ஈரான், அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (NPT) கையெழுத்திட்ட ஒரு நாடு. தனது அணுசக்தித் திட்டம் மின்சார உற்பத்தி போன்ற அமைதி நோக்கங்களுக்காகவே என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. யுரேனியத்தை செறிவூட்டும் அதன் நடவடிக்கைகள், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஒரு படியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இன்று வரை அந்த பொருளாதார தடைகள் அமுலில் இருந்து வருகின்றன.
ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 2015-ல் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே JCPOA (Joint Comprehensive Plan of Action) என்ற அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலைக் குறைத்துக் கொள்ளவும், தனது அணுசக்தி மையங்களை IAEA-வின் தொடர் கண்காணிப்புக்கு அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா 2018-ல் வெளியேறியதும், ஈரான் மீது தடைகளை மீண்டும் விதித்து தனது எதிர்ப்பரசியலை அரங்கேற்றியது.
அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் (NPT) கையெழுத்திட்ட ஈரானை, அதன் ஒவ்வொரு அசைவையும் கேள்வி கேட்கும் இஸ்ரேல், அதே சட்டத்தில் கையெழுத்திடாமல், எந்தவித சர்வதேசக் கட்டுப்பாடும் இன்றி தன்னிடம் அணு ஆயுதங்களை வைத்திருப்பது தார்மீக ரீதியாகச் சரியாகுமா? அணு ஆயுதங்களை தன்னிடம் வைத்துக் கொண்டு உலக சட்டங்களுக்கும், ஒப்பந்தங்களுக்கும் இணங்காமல் இருக்கும் இஸ்ரேல், அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி ஈரான் மீது தாக்குதல் நடாத்தியதை எவ்வாறு அங்கீகரிக்க முடியும்.
"ஈரான் அணு ஆயுதத்தைப் பெற்றால், அது மத்திய கிழக்கின் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்தாக முடியும்" என்பது இஸ்ரேலின் வாதம்.
ஆனால், ஒரு பிராந்தியத்தில் ஒரு நாடு மட்டும் அணு ஆயுதங்களை வைத்திருப்பது எப்படி ஸ்திரத்தன்மைக்கு வழிவகுக்கும்? இஸ்ரேலின் அணு ஆயுத பலம், பிராந்தியத்திலுள்ள மற்ற நாடுகளுக்கும், குறிப்பாக ஈரான் போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லையா? இஸ்ரேலின் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முன்னால் மண்டியிட்டு, ஈரான் மௌனமாக இருக்க வேண்டும் என்றா உலக ஆதிக்க சக்திகள் விரும்புகின்றன?
அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், இஸ்ரேலின் அணு ஆயுத இரகசியத்தைக் கண்டுகொள்ளாமல், ஈரானின் மீது மட்டும் அனைத்து கவனத்தையும் திருப்புவது அப்பட்டமான இரட்டை வேடமாகும். ஒரு நாட்டிற்கு ஆதரவுகளையும், பக்கச்சார்பான விதிவிலக்குகளையும் வழங்கி விட்டு, இன்னொரு நாட்டின் மீது தடைகளையும், கட்டுப்பாடுகளையும், அடாவடித்தனங்களையும் திணிப்பது மிகப் பெரும் மோசடியாகும். இது சர்வதேச சட்டங்களின் நம்பகத்தன்மையை கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்கியிருக்கின்றன.
மத்திய கிழக்கில் உண்மையான மற்றும் நீடித்த அமைதி ஏற்பட வேண்டுமானால், அணு ஆயுதம் தொடர்பான அணுகுமுறை பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். இஸ்ரேல் தன்னிடம் கணக்கில்லாத அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு, ஈரானை மட்டும் குறிவைப்பது அபாயகரமான ஒரு “விளையாட்டு”க்கு களம் அமைப்பதாகும்.
ஒரு "அணு ஆயுதமற்ற மத்திய கிழக்கு" (Nuclear-Weapon-Free Middle East) என்ற இலக்கை அடைய வேண்டுமானால், அதன் முதல் படியாக இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். அல்லது, இஸ்ரேல் அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும்.
அ
துவரை, ஈரான் மீது “அணு ஆயுதத்தை தயாரிக்கக் கூடாது” என்று கூறுவதற்கு இஸ்ரேலுக்கும் அதன் எஜமானர்களுக்கும் எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது.
0 Comments