இந்தியாவின் புதிய ஆயுதம் தாங்கிக் கப்பலான "ஐஎன்எஸ் கொல்கத்தா' ரக போர்க்கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை சனிக்கிழமை வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
ஒலியை விட அதிவேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கைத் தாக்கும் திறன் வாய்ந்தது. கோவா கடற்கரை அருகில் இருந்து இந்த ஏவுகணை எந்தவித குறைபாடும் இன்றி இலக்கை நோக்கிச் செலுத்தப்பட்டது.
இந்திய கடற்படையின் சேவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி "ஐஎன்எஸ் கொல்கத்தா' போர்க்கப்பல் இணைந்தது. அதிக அளவிலான பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தும் திறன் இந்தக் கப்பலில் உள்ளது. பொதுவாக ஒரு போர்க்கப்பல் 8 ஏவுகணைகள் வரை செலுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், "ஐஎன்எஸ் கொல்கத்தா' ரக போர்க்கப்பலில் இருந்து 16 ஏவுகணைகள் வரை ஒரே நேரத்தில் செலுத்த முடியும். இதுபோன்று மேலும் 2 போர்க்கப்பல்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 3 கப்பல்களும் பிரமோஸ் ஏவுகணைகளை செலுத்தும் அமைப்பைக் கொண்டிருக்கும். பிரம்மோஸ் ஏவுகணைகளை செலுத்துவதற்கு இந்தக் கப்பல்களில் "யுனிவர்சல் வெர்டிகல் லாஞ்சர்' என்ற மேடை பயன்படுத்தப்படுகிறது. இந்த மேடையில் ஏவுகணையை செங்குத்தாக பொருத்தி எந்தத் திசையிலும் செலுத்த முடியும்.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, பிரமோஸ் ஏவுகணை திட்டத் தலைவர் சுதிர் மிஸ்ரா, தனது திட்டக் குழுவினருக்கும், இந்தியக் கடற்படைக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்

0 Comments