ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முறையில் புதிய கட்சியொன்றை உருவாக்கவுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்களை தினேஷ் குணவர்த்தன மறுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் (மஹஜன எக்சத் பெரமுனவின்) தலைவருமான தினேஷ் குணவர்த்தன இது தொடர்பில் கொழும்பு நியூஸ் ருடே செய்திச் சேவைக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளார்.
தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தவிர்த்துவிட்டு முறையான எதிர்க்கட்சியொன்றை உருவாக்குவது எங்கள் நோக்கம். அதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கத்துவம் கொண்டுள்ள ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடியுள்ளோம்.
இதன் மூலம் தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் நீடிக்கும் கட்சிகள் மத்தியில் புதியதொரு கூட்டணியை உருவாக்குவதே எங்கள் நோக்கம். மற்றபடி புதியதாக இன்னொரு கட்சியை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை என்றும் தினேஷ் குணவர்த்தன தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இவ்வாறு உருவாக்கப்படப் போகும் புதிய கூட்டணிக்குத் தலைமை தாங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில், தற்போதைக்குத் தற்காலிக தலைவராக தினேஷ் குணவர்த்தன செயற்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Comments