அல்-கைதா அமைப்புக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்குமிடையே தொடர்பு இருக்கலாமென சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ள பொதுபல சேனா அமைப்பு, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் இயங்கும் சூறா சபை, ஹலால் சான்றிதழ் வழங்கும் அமைப்பு மற்றும் மத்ரஸாக்கள் தொடர்பாகவும் ஆராய வேண்டுமெனவும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது. கிருலப்பனையிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் இணைப்பாளர்
டிலன்த விதானகேவே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்; அல் கைதா மற்றும் தலிபான் என அழைப்படும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் ஆதரவளிப்போரையும் அவர்களின் சொத்துகளையும் தடை செய்யும் நோக்கில் கடந்த வாரத்தில் அரசாங்கம் பாராளுமன்றத்தில் ஐ.நா. சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளில் திருத்தத்தை மேற்கொள்ளும் வகையிலான சட்ட திருத்தமொன்றைச் சமர்ப்பித்துள்ளது. இதன்படி தலிபான் அல்லது அல் கைடா அமைப்புகளுடன் தொடர்பு வைத்துள்ள மற்றும் உதவிகள் வழங்குவோரைக் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் வர்த்தமானி வெளியிடப்படும்.
இலங்கையில் அல் கைடா மற்றும் தலிபான் போன்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் செயற்படக் கூடுமெனவும் அவற்றுக்கு நாட்டுக்குள் இருக்கும் சிலர் உதவக் கூடுமெனவும் நாம் சில வருடங்களாகக் கூறிவந்த நிலையில் இதனை இனவாத மற்றும் மதவாதக் கருத்துகளாகக் கூறி எம்மைப் பலர் திட்டித்தீர்த்தனர். இந்நிலையில் தற்போது அரசாங்கம் இவ்வாறான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்திருப்பதனூடாக நாம் கூறிவந்தது உண்மை என்பது தெளிவாகியுள்ளது.
நாட்டில் மதங்களுக்கிடையே முரண்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துக்
கொண்டு ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம், தமது நூறு நாள் ஆட்சியில் சர்வதேச ரீதியிலான மதப் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை ஏற்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது வரலாற்றில் கிடைத்த வெற்றியேயாகும். இவ்வாறான நடவடிக்கைøயை நாம் வரவேற்கும் அதேவேளை இது தொடர்பான தகவல்களை வழங்கவும் தயராகவுள்ளோம். இந்நிலையில் இந்த விடயத்துடன் இணைந்ததாகக் கருத்திற் கொள்ளப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன.
அதாவது அமைச்சராகவுள்ள ரவூப் ஹக்கீம் சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராகவும் அரசாங்கத்துக்கு எதிராகவும் ஐ.நா. வுக்கு 50 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை அடங்கிய அறிக்கையொன்றை அனுப்பியிருந்தார். அதில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மீது குற்றஞ்சாட்டி, அவர் எழுதியிருந்த அல் கைடா பற்றிய நூல் தொடர்பாக் குறிப்பிட்டிருந்தார்.
இதன்படி ஹக்கீம் என்பவர் அல் கைடாவுக்காக முன்னிப்பவர் மற்றும் அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்குபவர் என்றே அர்த்தப்படும். ஆகவே அவர் தொடர்பாகவும் இந்த குற்றப்பத்திரிகையை தயாரிக்க உதவியவர்கள் மற்றும் நிறுவனம் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும. இதேவேளை சூறா சபை என்பது அல் கைடா தலைவராகச் செயற்பட்ட பின்லாடனுக்கு ஆலோசனைகளை வழங்கும் சபையாகக் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அந்தப் பெயரில் திடீரென ஒரு சபை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தச் சபைக்கும் அல் கைடாவுக்கும் தொடர்புள்ளதா எனவும் ஆராயப்பட வேண்டும். அத்தோடு கனடாவில் ஹலால் சான்றிதழை வழங்கும் கனடா முஸ்லிம் சங்கம் அல் கைடா அமைப்புக்கு நிதியுதவி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. இதன்படி நாட்டிலுள்ள ஹலால் சான்றிதழ் விநியோகிக்கும் அமைப்பு தொடர்பாகவும் தேடிப் பார்க்க வேண்டும்.
அத்துடன் நாட்டுக்கும் மற்றும் சர்வதேச ரீதியிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைக்கப்பட்ட முஸ்லிம் வலயம் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்பதுடன் முக்கியமாக வில்பத்து காட்டை அண்மித்த பகுதியில் முஸ்லிம் வலயத்தை உருவாக்கவென அமைச்சரான ரிஷாத் பதியுதீனால் அராபிய நாடொன்றின் அரசசார்பற்ற நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக மிகவும் கவனமாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதேவேளை மத்ரஸா எனப்படும் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களினூடாக பாகிஸ்தானில் பயங்கரவாத அமைப்புகளுக்குத் தேவையானவர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன்படி இலங்கையிலுள்ள மத்ரஸாக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும். இவை மாத்திரமன்றி முகத்தை மூடிய ஆடைகளுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட வேண்டும்.
இவ்வாறான ஆடைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் அங்கும் இங்கும் கொண்டு செல்லப்படுவதற்கான இடமுண்டு. இதனால் அவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பதுடன் போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பாகவும் தேடிப்பார்க்க வேண்டுமென்றார்.

0 Comments