Ticker

6/recent/ticker-posts

தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர்கள் சந்திப்பு


போக்கோ ஹராம் தீவிரவாதிகளை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளைத் திட்டமிட ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர்கள் கேமரூனில் சந்தித்துப் பேசினர். தீவிரவாதிகளை ஒழிப்பதில் பல்வேறு புதிய நடவடிக்கைகள் இச்சந்திப்பின் போது திட்டமிடப்பட்டன. 


ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர் மற்றும் சாத் போன்ற நாடுகளை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பே போக்கோ ஹராம். மேற்கத்திய கல்வியை ஒழிக்கவேண்டும் மற்றும் ஷரியாத் சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவேண்டும் என்பதும் இந்த அமைப்பின் இலக்கு. 

குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் என பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்துள்ள இந்த அமைப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் எதிர்பார்த்த பயன் இல்லை. இந்நிலையில் இந்த அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. 

இதற்கான ஒரு முயற்சியாக ஆப்பிக்க நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு ஒன்று கேமரூன் நாட்டின் தலைநகர் யாண்டேவில் நடைபெற்றது. நைஜீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இச்சந்திப்பில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். 

ஆப்பிக்க ஒன்றியம் மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கும் புதிய நடவடிக்கைகள் வாயிலாக போக்கோ ஹராம் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்ற புதிய நம்பிக்கைகள் துளிர்விடத்தொடங்கியுள்ளன. நைஜீரிய நாட்டில் தீவிரவாதிகளை ஒழிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்ட சாத் ராணுவத்தினர் 200 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளைக் கொன்று குவித்ததையடுத்து இந்த சந்திப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments