Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் இனவாதத்தை தூண்டுகின்றன - ஞானசார தேரர்

நாட்டில் மீண்டும் புலி பயங்கரவாதத்தை உருவாக்க முன்னாள் போராளிகள் முயற்சிப்பதாக சிங்கள இனவாத அமைப்பான பொதுபல சேனா  குற்றம் சாட்டியுள்ளது.
தமிழகத்திலிருந்து இலங்கை அகதிகள் என்ற போர்வையில் போராளிகள் இலங்கைக்குள் அழைத்து வரப்படுவதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரா தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் :-
‘வடக்கில் மக்கள் மீள்க் குடியேற்றப்படுதல், மற்றும் பூநகரியில் முஸ்லிம்களுக்கான இடம் வழங்கள் உள்ளிட்ட விடயங்களில் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
ஏனெனில் வடக்கு கிழக்கில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றப்படவுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
அவ்வாறு மீளக்குடியேற்றும் போது, அங்கு வாழந்த சிங்கள மக்கள் தொடர்பில், குறிப்பாக வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் குறித்து கரிசனையுடன் செயற்படவேண்டும்.
இன்று நாம் இனவாதத்தை தூண்டிவிடுவதாக இந்த அரசாங்கம் பிரசாரம் செய்கின்றது. ஆனால் இந்த நாட்டிலே தமிழ் முஸ்லிம் இனவாதத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் காங்கிரசுமே தூண்டிவிடுகின்றது.
யுத்தம் நிறைவடைந்து 3 வருடங்களாக புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது, பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக ஒன்றிணைகின்றனர்.
அவர்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டிலே மீண்டும் புலி பயங்கரவாதத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். அதற்கு வலுசேர்க்கும் வகையில் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சென்ற அகதிகள் மீண்டும் இலங்கைக்கு குறிப்பாக வடக்கிற்கு அழைத்து வந்து மீளக்குடியேற்றப்படுகின்றனர்.
இவர்கள் உண்மையில் வடக்கிலிருந்து சென்றவர்கள் தான? என்று உறுதிப்படுத்த வேண்டும். அப்படி இல்லையாயின் அவர்களுள் பயிற்சி பெற்ற போராளிகள் உள்நுழைந்து இலங்கையில் மீண்டும் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக ஒன்றினைய முனைவர். அதுதான் தற்போது நடைபெறுகின்றது.
அதேபோல் இந்தியாவின் ‘ரோ’ பிரிவினரும் அகதிகள் என்ற போர்வையில் இலங்கைக்குள் உள்நுழைந்து தமக்கு தேவையான விடயங்களை அரங்கேற்ற முயற்சிக்கின்றனர்.
இவ்வாறன ஒரு நிலைமைக்கே இந்த நாட்டை புதிய அரசாங்கம் கொண்டுச் செல்கின்றது.’ என்றும் குற்றம் சுமத்தினார்.

Post a Comment

0 Comments