வங்காளதேசத்தில் சைக்கிள் திருடியதாக 13 வயது சிறுவனை பிடித்து பொது இடத்தில் கட்டி வைத்து, அவனை அடித்து, உதைத்து, அணுஅணுவாக சித்ரவதை செய்து கொன்ற காட்சியை இண்டர்நெட்டில் வெளியிட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடகிழக்கு வங்காளதேசத்தில் காய்கறி விற்று குடும்பத்தை காப்பாற்றிவந்த அந்த சிறுவனை சைக்கிள் திருடியதாக குற்றம்சாட்டி பிடித்த 13 பேர் ஒன்றாக சேர்ந்து அவனை அடித்து, உடைத்து, துன்புறுத்திய காட்சிகளை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர்.
வலி தாங்காமல் அந்த சிறுவன் அலறித் துடிப்பதையும், ரத்த காயங்களுடன் சோர்ந்துப் போய் அவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்பதையும் கண்டு ஆனந்தப்பட்டு அந்த கும்பல் வெறித்தனாமக சிரிக்கும் காட்சியும், மயக்க நிலையில் கிடந்த சிறுவன் இறந்துவிடும் காட்சியும் அடங்கிய 28 நிமிட வீடியோவை அந்த சமூகவிரோத கும்பல் இண்டர்நெட்டிலும் வெளியிட்டு மகிழ்ந்தது.
சமூக வலைத்தளங்களின் மூலமாக உலகில் உள்ள கோடிக்கணக்கான மனிதநேயம் மிக்கவர்களை உலுக்கி எடுத்த அந்த வீடியோவில் உள்ள கொலை பாதகர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் வங்காளதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து, 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கொடூர படுகொலையின் முக்கிய குற்றவாளியான நபர் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்று விட்டான்.
அங்கு வேலை செய்தபடி விடுமுறையில் தனது தாய்நாடான வங்காளதேசத்துக்கு வந்தபோது இந்த அட்டூழியத்தை செய்துவிட்டு மீண்டும் சவுதிக்கு தப்பிச் சென்றுவிட்ட அவனை சவுதி போலீசார் கைது செய்து காவலில் அடைத்து வைத்துள்ளனர்.
விரைவில் அவன் வங்காளதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவான் என தெரிகிறது.
இதற்கிடையில், இந்த படுகொலை தொடர்பாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 12 பேர் மீதும் போலீசார் சில்ஹெட் நகர கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.
பலியான அந்த 13 வயது சிறுவனின் பெயர் சமியுல் இஸ்லாம் ரஜவுன் என்றும், அவனது உடலில் 28 பகுதிகளில் ஏற்பட்ட உள்காயங்களால் உண்டான ரத்தக் கசிவினால் அவன் உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments