Ticker

6/recent/ticker-posts

நல்லாட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் - முஜிபுர் றஹ்மான்

நல்லாட்சியின் திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆணையை வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ள முஜிபுர் ரஹ்மான், இந்த பயணத்தில் இன, மத, கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு  83 ஆயிரத்து 884 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில்  கொழும்பு மாவட்டத்திலிருந்து 7 ஆவது இடத்தில் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான்,  தனது வெற்றிக்கு உடல் ரீதியிலும் நிதி ரீதியாகவும் ஒத்துழைத்தோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

தேர்தல் வெற்றிக்குபின்னர் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கடந்த பல வருட காலமாக மக்களுக்காக குரல் கொடுத்தமையினாலும் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தியமையினாலும் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்துள்ளனர். இதற்காக நான் முதலில் இறைவனுக்கு நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். 

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கொழும்பிலுள்ள அப்பாவி பொதுமக்கள் பலிவாங்கப்பட்டுள்ளனர். தொடர்ச்சியாக 20 வருடகாலமாக இங்குள்ள மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது. அத்துடன் மக்களின் வாழ்வாதாரம் கீழ் மட்டத்தில் இருக்கின்றது. இவற்றை கட்டியெழுப்ப் வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. 

மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஆலோசனைகளுக்கமைய கொழும்பின் அபிவிருத்திக்காக பல வேலை திட்டங்களை முன்னெடுக்கவுள்ளேன். கொழும்பை கட்டியெழுப்புவதற்கான எனது வேலைத்திட்டங்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் பணிவாய் கேட்டுக்கொள்கின்றேன். 

அத்துடன் கடந்த கால எனது அரசியல் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படாது. எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு சமூகத்திற்காக எவ்வாறு குரல்கொடுத்தேனா அது தொடரும்.

எனது வெற்றிக்காக பலர் நோன்பு பிடித்தனர். அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலுள்ள மக்களும் எனது வெற்றியை எதிர்ப்பார்த்தனர். எனக்காக பிறார்த்தித்த அணைவருக்கும் நன்றிகள் என்றார். 

Post a Comment

0 Comments