ஒடிசா மாநிலம் காலாகேண்டி மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின நபர் தானா மஜ்கி என்பவரின் மனைவி அனாங், காசநோய் காரணமாக, கடந்த 23–ந் தேதி பவானிபட்னா மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வழங்குவதற்கு ஆஸ்பத்திரி அதிகாரிகள் மறுத்து விட்டதால், தானா மஜ்கி, தனது மனைவியின் உடலை போர்வையில் சுற்றி தனது தோளில் சுமந்து சென்றார். 10 கி.மீ. தூரம் அவர் சுமந்து சென்ற சம்பவம், சமூக வலைதளங்களில் புகைப்படமாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒடிசா மனித உரிமை ஆணையம், பத்திரிகை செய்திகள் அடிப்படையில், தானாக முன்வந்து இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி, 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காலாகேண்டி மாவட்ட கலெக்டர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோருக்கு ஆணைய தலைவர் (பொறுப்பு) நீதிபதி பி.கே.மிஸ்ரா நேற்று உத்தரவிட்டார். அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் 15–ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். dailythanthi.com

0 Comments