தமிழ்நாட்டுக்கு எதிராக இதே நிலை நீடித்தால் இந்தியா ஒன்றாக இருக்காது என திருச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கர்நாடகாவில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அதை தடுக்கத் தவறிய மத்திய, கர்நாடக அரசுகளை கண்டித்தும் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நேற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அக்கட்சியி னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற னர். மாநகர துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அதற்கு முன்னதாக வைகோ அளித்த பேட்டி:
கர்நாடகாவில் தமிழர்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வன்முறை நடத்தப்பட்டிருக்கிறது. இதைத் தடுக்க கர்நாடக அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தில் நடத்தப்படும் இந்த போராட்டத்தின் போது வன்முறைகள் ஏதும் இல்லை. அறவழியில் எதிர்ப்பை பதிவு செய்கிறோம். கர்நாடகாவில் 500 லாரிகளும், பேருந்துகளும் கொளுத்தப்பட்டன.
காவிரி பிரச்சினை, மக்களின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் பிரச்சினை என்பதால், தமிழகமே ஒன்றிணைந்து எழுந்திருக்கிறது. இதை உணர்ந்து, மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும். தமிழகத் துக்கு எதிரான நிலை நீடித்தால் இந்தியா ஒன்றாக இருக்காது என்றார் வைகோ.

0 Comments