Ticker

6/recent/ticker-posts

காவிரி பிரச்சினையால் போராட்டம்: வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் கர்நாடக, தமிழக அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

காவிரி பிரச்சினையால் வன்முறை சம்பவங்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்டம்–ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என்றும் கர்நாடக, தமிழக அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த மக்கள் கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளர் சிவகுமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:–

வன்முறை சம்பவங்கள்

கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக காவிரி விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்களால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவங்களில் பொது சொத்துகளுக்கும், தனியார் சொத்துகளுக்கும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. கர்நாடகத்தில் பல இடங்களில் தமிழக முதல்– அமைச்சர் ஜெயலலிதாவின் உருவபொம்மை எரிக்கப்பட்டு உள்ளது. அப்பாவி மக்கள் தாக்கப்பட்டு உள்ளனர். 
இதுபோன்ற சம்பவங்களால் வன்முறை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு இரு மாநில அரசுகளும் சட்டம்– ஒழுங்கை நிலைநாட்டவும், மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை

இந்த மனு நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சி.நாகப்பன், தான் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து நேற்று மதியம் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த மனுவின் மீதான விசாரணை நடைபெற்றது.

மனுதாரர் சார்பாக மூத்த வக்கீல் ஆதிஷ் அகர்வாலா, வக்கீல்கள் என்.ராஜாராமன், ரீகன் பெல் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்கள் வாதாடும் போது கடந்த சில நாட்களாக கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் பற்றியும், நிலவி வரும் பதற்றம் குறித்தும் விளக்கி கூறினார்கள். வன்முறை சம்பவங்களால் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் நாசமாகி இருப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

உத்தரவு

 பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:–

இந்த விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் நோட்டீஸ் அனுப்ப விரும்பவில்லை. இது தொடர்பாக 2009–ம் ஆண்டு பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது குறித்த வழக்கு ஒன்றில் மூன்று நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் போராட்டம் என்ற பெயரில் கடையடைப்பு, மறியல் போராட்டம் ஆகியவை தொடர்பாக கூறப்பட்ட வழிகாட்டுதல்களை நினைவு படுத்த விரும்புகிறோம். 

கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு எதிராக எந்த போராட்டமும் நடத்தக்கூடாது என்பதுதான் அந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சம் ஆகும். இதை ஒவ்வொருவரும் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்.

 சட்டம்–ஒழுங்கு

கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் சட்டபூர்வமாக அதனை கோர்ட்டு வழியாகத்தான் எதிர் கொள்ள வேண்டும். மக்கள் சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க கூடாது. காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக வன்முறைகள், போராட்டங்கள், சொத்துகளை சேதப்படுத்துவது போன்றவை நடைபெறாமல் கர்நாடக, தமிழக அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். சட்டம்–ஒழுங்கை நிலைநாட்டி அமைதியை ஏற்படுத்த வேண்டும். இது மாநில அரசுகளின் கடமை ஆகும். 

எந்தவிதமான போராட்டங்களும், மறியல்களும் நடைபெறாமல் தடுக்க இரு மாநிலங்களும் தக்க நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறோம். இரு மாநிலங்களும் சமாதானம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் சட்டத்தின் மாண்புக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

20–ந் தேதி விசாரணை

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள், கோர்ட்டில் ஆஜராகி இருந்த கர்நாடக அரசு வக்கீல் ரகுபதி மற்றும் தமிழக கூடுதல் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணிய பிரசாத், அரசு வக்கீல் பி.பாலாஜி ஆகியோரை அழைத்து அவர்களிடம் மனுவின் பிரதிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர்கள் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இது குறித்து எடுத்துரைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.   

மேலும், வருகிற 20–ந் தேதி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான இடைக்கால மனுவுடன் சேர்த்து இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் உத்தரவிட்டனர்.   dailythanthi.com

Post a Comment

0 Comments