Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியவரே இந்த ஸ்னோடென்: வெள்ளை மாளிகை காட்டம்

அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ-வின் முன்னாள் உளவாளி எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியவரே தவிர உலகுக்கு ரகசிய தகவல்களை தெரிவிப்பவர் அல்ல என வெள்ளை மாளிக்கை தெரிவித்துள்ளது.

வெள்ளி மாளிகையில் செய்தித்துறை செயலர் ஜோஷ் ஏர்னஸ்ட் கூறும்போது, "உண்மையான தகவல் தாங்கிகள் தேசத்தின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் விளைவிக்காமல் நன்கு திட்டமிடப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி சில தகவல்களை வெளி உலகுக்கு தெரிவிப்பார்கள். ஆனால் எட்வர்ட் ஸ்னோடென் அப்படி செய்யவில்லை. மாறாக அமெரிக்க பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியவரே ஸ்னோடென். 
அவருடைய நடத்தை அமெரிக்கர்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் ஸ்னோடென் அமெரிக்காவுக்கு திரும்பி அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது.

அமெரிக்க நீதித்துறைக்கு உட்பட்டு ஒரு கிரிமினில் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு என்ன உரிமைகள் பொருந்துமோ அத்தனையும் ஸ்னோடெனுக்கு வழங்கப்படும்" என்றார்.

முன்னதாக பிரிட்டன் நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்க அதிபர் ஒபாமா தனக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என ஸ்னோடென் கோரியிருந்தார்.

இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலரின் இந்த அறிவிப்பு அமெரிக்கா ஸ்னோடென் மீதான நிலைப்பாட்டில் சற்றும் தளரவில்லை என்பதையே உணர்த்துகிறது.


ஸ்னோடென் கடந்த 2013-ம் ஆண்டு முதல் ரஷ்யாவில் தங்கியிருக்கிறார். அவர் அங்கு தங்கியிருக்க அனுமதிக்கப்பட்ட கால அவகாசம் அடுத்த ஆண்டுடன் நிறைவடைகிறது. அமெரிக்காவுக்கு அவர் திரும்பச் சென்றால் 30 ஆண்டுகள் வரை அவர் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments