எனவே இது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி விசாரணை செய்து மக்களுக்கு நீதிபெற்றுக்கொடுக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.
இதேவேளை, புனித பூமி என்ற பெயரில் ஆங்காங்கே சிலரின் திட்டங்களுக்கமைய காணிகள் அபகரிக்கப்படுகின்றது. இதன்போது அப்பகுதியில் வாழும் மக்களின் அபிலாசைகள் கருத்திற்கொள்ளப்படுவதில்லை.
அவர்களின் நலன்கள் குறித்தும் பார்க்கப்படுவதில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றம் சுமத்தினார்.
கடந்த வியாழக்கிழமை கூடிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது காணி பெறுகை சட்டத்தின் கீழ் கட்டளை வர்த்தமானி அறிவித்தலுக்கான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்;
கடந்த ஆட்சிக் காலத்தின் போது கொழும்பு நகரில் பொதுமக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன. சட்டத்திற்கு முரணான முறையில் மக்களின் காணிகள் பலவந்தமாக கைப்பற்றப்பட்டன.
முதலீட்டாளர்களுக்கு தேவைப்படும் போது மக்களின் அபிலாஷைகளை கருத்திற் கொள்ளாது கைப்பற்றப்பட்டன.
கொழும்பு நகரில் அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு இதுவரையில் உரிய நஷ்டஈடு வழங்கப்படவில்லை. கொம்பனி வீதியில் 400 ஏக்கர் காணி அபகரிக்கப்பட்டு 100 வருடம் பழைமை வாய்ந்த வீடுகள் அகற்றப்பட்டும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை.
கோட்டை செத்தம் வீதியில் 17 விற்பனை நிலையங்கள் அகற்றப்பட்டன. இதனை பலவந்தமாக அதிகாரத்தை பிரயோகித்து முன்னெடுத்தனர். இவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சில காணிகள் அவசர கால நிலையின் கீழ் அகற்றப்பட்டன.
எனவே ஆட்சி மாற்றத்தின் பின்னர் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதேபோன்று மாதம்பை பிரதேசத்தில் புனித பூமி என்ற பெயரில் மக்களின் காணி கைப்பற்றியமை தொடர்பில் உரிய விசாரணை செய்ய வேண்டும்.
புனித பூமி என்றபெயரில் ஆங்காங்கே காணிகள் சுவீகரிக்கப்பட்டு வர்த்தமானியில் அறிவிக்கப்படுகின்றது.
எனினும் வர்த்தமானியில் வெ ளிவரும் வரை காணி அமைச்சருக்கு விபரம் தெரியாமல் இருக்கின்றது.
இங்கு மக்களின் நலன்கள் பேணப்படுவதில்லை. பல நூறு வருடங்கள் குறித்த பகுதியில் மக்கள் வாழ்ந்திருப்பினும் அவர்களின் விருப்பு வெறுப்பு குறித்து ஆராயப்படுவதில்லை. அத்துடன், அம்மக்களின் தொழில்வாய்ப்புகள், விவசாயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படுவதில்லை.
எனவே காணிகள் அபகரிக்கும் முன்பு பலகோணங்களில் ஆராயவேண்டும். அத்துடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பு குறித்து தற்போது விசாரணை நடத்தப்படுவதுடன் அம்மக்களின் தொழில்வாய்ப்புகள், விவசாயம் குறித்தும் அவதானம் செலுத்தப்படுவதில்லை.
எனவே காணிகள் அபகரிக்கும் முன்பு பலகோணங்களில் ஆராயவேண்டும். அத்துடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட காணி அபகரிப்பு குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

0 Comments