Ticker

6/recent/ticker-posts

சர்ச்சைக்குரிய மட்டக்களப்பு சுமணரத்ன தேரோவுக்கு பிணை

இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு நகரில் சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தொடர்பாக நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பௌத்த மத குருவான அம்பிட்டிய சுமனரத்ன தேரோவுக்கு இன்று புதன்கிழமை நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி மா .கணேசராசா தலா ரூபா 25 ஆயிரம் பெறுமதியான இருவரின் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கி மீண்டும் அடுத்த மாதம் 25 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார் .
இந்த மாதம் 3ம் தேதி பொது பல சேனா பௌத்த மதகுருமார்களும் அந்த அமைப்பை சார்ந்தவர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் நடைபெறவிருந்தது.
பொது பல சேனாவின் வருகை அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக அமையலாம் என்ற காரணத்தை முன் வைத்து அந்த அமைப்பினர் வருகைக்கும் வீதியில் கூடுவதற்கும் போலிஸாரால் நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து பௌத்த விகாரையில் கூடியிருந்த பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்களுக்கும் பொது பல சேனவின் வருகைக்கு எதிராக வீதியில் குடியிருந்த பொது மக்களுக்குமிடையில் குழப்ப நிலை காணப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் நீதிமன்றத்தில் அம்பிட்டிய சுமனரத்ன தேரோவிற்கு எதிராக முன் வைத்தஅறிக்கையில் பொது மக்களை வீதியில் கூட்டி சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் கலகத்தை ஏற்படுத்துவதற்கு உடந்தையாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன..
போலிஸார் முன் வைத்த அறிக்கையின் பேரில் நீதிமன்றத்தினால் இன்று புதன்கிழமை மன்றில் ஆஜராக வேண்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது .

Post a Comment

0 Comments