( மினுவாங்கொடை நிருபர்)
பேரினவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கான கண்டியின் பலபிரதேசங்களுக்கும் நேற்று (15) வியாழக்கிழமை விஜயம் மேற்கொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, பாதிக்கப்பட்ட மக்களுடன் நடைபெற்ற விவகாரங்கள் தொடர்பில் ஒன்றரக் கலந்துரையாடினார்.
அப்பிரதேசங்களில் தாக்குதல்களுக்குள்ளான பள்ளிவாசல்களின் தலைவர்கள் உட்பட நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் ஆகியோர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டார்.
கண்டி - மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகா நாயக்க தேரர்களையும் சந்தித்து, அவர்களுக்கும் இது தொடர்பில் விளக்கமான தெளிவூட்டல்களை எடுத்துரைத்தார்.
இதன்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் கட்டுமானப் பணிகள், மக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மக்களின் தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, முஸ்லிம் சமூகம் இவ்வாறான இனவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பங்களில் நிதானமாகவும், அவதானமாகவும் செயற்பட வேண்டும். கண்டியில் பல இடங்களில் ஏற்பட்ட சம்பவம் முஸ்லிம் சமூகத்துக்கு பல படிப்பினைகளைத் தந்துள்ளது. இக் கலவரத்தின் பின்னர் இந்த நாட்டில் மீண்டுமொரு அச்ச நிலை, மக்களுக்கு மத்தியில் தோன்றியுள்ளது. சட்டம் ஒழுங்கை அமுல்படுத்த வேண்டிய தரப்பினர் கண்டிச் சம்பவத்தின் போது தமது கடமையினைச் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டனர். இதன் காரணமாகவே, கண்டி மாவட்டத்தின் ஏனைய பகுதிகளுக்கும் கலவரம் பரவத் துவங்கியுள்ளது.
இலங்கையில் இனவாதம் பாரியளவில் வளர்க்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வாறான அசம்பாவிதங்கள் தொடர இடமுண்டு. எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு இந்த விடயத்தில் அதிக பொறுப்புள்ளதை நாம் உணர்கின்றோம். சட்ட ரீதியான நடவடிக்கைகள் மூலம் இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலேயே கவனம் செலுத்த வேண்டும். சிங்கள, முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமையைச் சீர் குழைக்க சில விஷமச் சக்திகள் முனைந்து கொண்டிருக்கின்றன. இதற்கு நாம் இடம் விடக்கூடாது. இக்கிராமத்திலும், அண்மித்த கிராமத்திலும் இச்சம்பவம் ஊடாக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன.எந்த சமயமாக இருந்தாலும், எல்லாம் உயிர்கள்தான். இது அரசியல் வாதி என்ற வகையில் எனக்கும் சோகத்தைத் தந்துள்ளது. நாம் சொத்துக்களையும், உடைமைகளையும் அழிக்கலாம். ஆனால், அதன் பின் விளைவுகள் என்ன என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். தற்போது இருப்பதைப்போல், நாம் மீண்டும் சமாதான நல்லுறவோடு வாழ்வதற்குக் கற்றுக்கொள்வோம்
என்றார்.
இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கண்டி - கெங்கல்ல பள்ளிவாசலுக்கும், வேறு சில பள்ளிவாசல்களுக்கும், பேரினவாதத் தாக்குதல்களினால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கும், வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கும் சென்று அமைச்சர் இவ்விஜயத்தின்போது பார்வையிட்டார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் பல பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் காரணமாக சொத்துக்களை இழந்த மக்களுக்கு, அரசாங்கத்திடமிருந்து நஷ்ட ஈடுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளையும், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆரம்பித்துள்ளார்.
இதுதவிர, இத்தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டு உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் அமைச்சர் சென்று, அக்குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். அத்துடன், அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து மரணித்த முஸ்லிம் இளைஞரின் குடும்பத்தினருக்கு வீட்டைப் புனர்நிர்மாணம் செய்துகொள்ளவும், மேலும் மரணித்த சிங்கள சகோதர இளைஞரின் குடும்பத்தினருக்கும் நிதி உதவிகளைப் பெற்றுக் கொடுத்தார்.
( ஐ. ஏ. காதிர் கான் )

0 Comments