Ticker

6/recent/ticker-posts

மலையகத்தில் தனித் தமிழ் கல்வி வலயங்கள்? முஸ்லிம் பாடசாலைகளின் நிலை என்ன ?

ஏ எம் எம் முஸம்மில், (B A Hons) தலைவர் மலையக முஸ்லிம் கவுன்சில் – UCMC

இலங்கையில் தற்போதைக்கு அமுலில் இருக்கும் 98 கல்வி வலயங்களை 200 வலயங்களாக கூட்டி
கல்வித்துறையில் தற்போதைக்கு ஏற்பட்டுள்ள நிர்வாக சிக்கல்கள் மற்றும் சம கால கல்வித் துரையின் அபிவிருத்தி
தேக்கத்தை நிவர்த்திசெய்யும் வகையிலும் அரசாங்கம் மேற்படி திட்டத்தை அமுல்நடத்த திட்டமிட்டு வருகின்றது.
அதாவது நாடளாவிய ரீதியில், தற்போது கல்வி நிர்வாக கட்டமைப்பானது , 98 வலயக்கல்விப் பணிமனைகளுடாக
இயங்கிக்கொண்டிருக்கின்றன.


அரசின் புதிய கல்வி சீர்த்திருத்தக் கொள்கையின் ஒரு செயற்பாடாக, தற்போது அமுலில் இருக்கும் கோட்டக்
கல்விக் காரியாலயங்களை இல்லாமல் ஆக்கப் படுகின்றன . அத்துடன் 98 ஆக உள்ள வலயக்கல்விக்
காரியாலயங்களை 200 ஆக அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றதாக அறியமுடிகின்றது..
அதற்கிணங்க மேற்படி கல்வி வலயங்களை 200 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பிரேரணையை
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களால் முன்வைக்கப் பட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும்
பெறப் பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த வகையில் ஊவா மாகாணத்தை எடுத்துக் கொண்டால் இங்கு   தற்போது ஒன்பது கல்வி வலயங்கள்
இயங்குகின்றன. அவற்றை இருபது கல்வி வலயங்களாக விரிவாக்குவதற்கான அனுமதியை கல்வி அமைச்சு
வழங்கியுள்ளது. அதில் நான்கு தனித் தமிழ் கல்வி வலயங்களைஎனும் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை
மலையக தமிழ் அரசியல் சமூக தலைமைகளாலும் சிவில் சமூகத்தவர்களாலும் முன்வைக்கப் பட்டு வருகின்றது.
அதற்கிணங்க பல புதிய பிரதேசங்களை இணைத்து, புதிய வலயங்களை உருவாக்கும் பணிகள் ஊவா மாகாண
சபையினூடாக முன்னெடுக்கப்பட்டும் வருகின்றனஎன்பதையும் நம்பகரமாக அறிய முடிகின்றது.

குறித்த இந்த நிர்வாகரீதியிலான மாற்றங்களினூடாக ஊவாவில் நான்கு தனித் தமிழ் கல்விவலயங்கள் உருவாக்கப்
பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப் பட்டு வருகின்றது.

அதில் , ......
1. ஹல்துமுல்லை – ஹப்புத்தளை தமிழ்க்கல்வி வலயம்
2. பண்டாரவளை – வெளிமடை தமிழ்க்கல்வி வலயம்
3. பதுளை – ஹாலிஎல தமிழ்க்கல்வி வலயம்
4. பசறை – லுணகலை தமிழ்க்கல்வி வலயம்
எனும் வகையில் உத்தேச தனித் தமிழ் கல்வி வலயங்கள் உருவாக்கப் பட வேண்டும் என்று புரட்சித்
தமிழ் பேரவை தலைவர் சகோ பத்மநாதன் அவர்கள் முன்மொளிந் துள்ள தாகவும் இம்முன் மொழிவுக்கான
ஆதரவை ஊவா தமிழ் சமூக கல்வி ஆர்வலர்கள் வழங்கி வருகின்றார்கள்.

உண்மையில் ஊவா மாகாணத்தில் கடந்த கால அரசியல் சமூக நகர்வுகளில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள்
துருவப் பட்டு செயற்பட்ட கசப்பான பல அனுபவங்கள் எம்மத்தியில் உள்ளன. குறிப்பாக கடந்த 2005 ம்
ஆண்டு வழங்கப் பட்ட மலையக தமிழ் மொழிமூல ஆசிரிய நியமனங்களில் குறித்த நிலை உருவானதை
யாராலும் மறுக்க முடியாது. இந் நிலைமைகளுக்கான முக்கிய காரணம் ஊவாவில் அல்லது மலையகத்தில்
தமிழ் பேசும் இன்னொரு சிரும்பான்மையான முஸ்லிம் சமூகம் குறித்த மேட்போன்ற திட்டங்களின் மூலம்
நேரடியாக பாதிக்கப் படுகின்றதொரு சமூகமாக உள்ளதாகும்.

குறிப்பாக மாகாண சபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம்
ஒன்றை பெறாத சமூகமாக ஊவாவில் முஸ்லிம்கள் இருப்பதால் இவ்வாறான “ கொள்கை வகுப்பு”
சந்தர்ப்பங்களில் எமக்கான குரல் அங்கே இல்லாமல் இருப்பது இதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
இதன் காரணமாகவே குறித்த சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் வரை சென்று நியாயம் பெறவேண்டிய நிலை
ஏற்பட்டது.

கடந்த காலங்களில் ஊவா மாகாண சபையில் தனியானதொரு தமிழ் கல்வியமைச்சு செயலில் இருந்தது. அவ்வமைச்சிக்கு பொறுப்பாக இருந்த அப்போததைய மாகாண கல்வியமைச்சர் சச்சிதாநாதன் அவர்களின் சில செயற்பாடுகளில் அதிருப்தி கொண்ட ஊவா சிவில் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து
ஊவா முஸ்லிம் கல்வி அபிவித்தி மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் பொறுப்பை தாங்களிடமே வைத்துக் கொள்ளுமாறு அப்போததைய மாகாண முதல்வர் ஏ எம் புத்த தாச அவர்களிடம் கோரிக்கை முனவைக்கப்பட்டது. அதே போல் அடுத்து வந்த மாகாண சபைகளிலும் ( விஜித முனி சொய்சா , ஷஷீந்தர ராஜபக்ஷ )
இக்கோரிக்கை முஸ்லிம் தரப்பால் முன்வைக்கப் பட்டது.
அந்த கசப்பான அனுபவங்கள் இனிமேலும் நடக்கக் கூடாது என்றே நாம் வலியுறுத்தி கூறுகின்றோம்.

ஒரே மொழியை பேசுகின்ற இரு சிறும்பான்மை சமூகங்கள் சார்ந்த விடயங்கள் முன்னெடுக்கப் படும் போது குறித்த விடயத்தில் எந்தவொரு சமூகமும் பாதிக்கப் படாத போக்கையே நாம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஊவாவில் 32 முஸ்லிம் பாடசாலைகள் உள்ளன. இவ்வாறு தனித் தமிழ் கல்வி வலயங்கள்
உருவாகப் படும் போது இப்பாடசாலைகளின் நிர்வாகம் / அபிவிருத்தி எந்த நிறுவனத்தின் கீழ் தங்கி
இருக்கும். தற்போது கூட ஊவாவில் தமிழ் கல்வி நிர்வாகம் அமைச்சர் செந்தில் தொண்டமான் வசமே உள்ளது.
முஸ்லிம் பாடசாலைகள் மாகாண முதலமைச்சர் வசம் உள்ளதாக கூறுகின்றார்கள். மாகாண கல்வித் திணைக்களத்திலும் தமிழ் பிரிவு வேறாக செயல்பட்டு வருகின்றது. இத்தமிழ் கல்விப் பிரிவை பூரண அதிகாரத்துடன் செயற்பட சிங்கள அதிகாரிகள் பெரும் முட்டுக் கட்டையாக இருக்கின்றார்கள் என்ற குற்றச்
சாட்டு முன்வைக்கப் பட்டுவரும் நிலையில் முஸ்லிம் ஆசிரியர்களின் சம்பள உயர்வு / இடமாற்றம் போன்ற
அடிப்படை தேவைகளை பெற்றுக் கொள்ள சொல்ல முடியாத துயரங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது.

இன்று ஊவா முஸ்லிம் சமூகம் இப்பிரிவினைகளால் முகங் கொடுக்கும் அன்றாட சவால்கள் சீரழிவுகள் பற்றி
ஊவா முஸ்லிம் கல்வி சமூகம் அன்றாடம் அனுபவித்து வருவதை துறை சார்ந்தவர்கள் அறிவார்கள்.
குறித்த இந்த 200 கல்வி வலயங்களை உருவாக்கும் திட்டம் ஒரு தேசிய திட்டமாகும். ஆகவே இதற்கான
அமைச்சரவை அன்கீரத்தின் போது முஸ்லிம் தலைமைகளும் அவ்வமைச்சரவை கூட்டத்தில் இருந்துதான்
இருப்பார்கள். கல்வித்துறையின் முதுகெலும்பாக கருதப் படக் கூடிய ஆசிரிய சமூகத்தின் , அதிபர்மார்களின்
, கல்விசார்/ கல்விசாரா ஊழியர்களின் தொழில் ரீதியிலான அனைத்து அடிப்படை விடயங்களும் இந்த கல்வி
வலயங்களின் ஊடாகத் தான் முன்னெடுக்கப் படுகின்றன. அத்துடன் கல்வி சார் அபிவிருத்தி திட்டங்கள் ,
மற்றும் கல்வி கொள்கை வகுப்புக்கள் அமுல் நடத்தப் படுதல் போன்ற இன்னோரன்ன விடயங்கள்
இக்கல்விவலயங்களின் ஊடாகத் தான் முன்னெடுக்கப் படுகின்றன.

இதன் ஆழ அகலங்களை அறிந்து குறித்த விடயத்தில் திருத்தங்கள் ஆலோசனைகள் முன்வைக்கப் பட்டு
குறித்த அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப் படுத்தப் பட்டால் சமூக விரிசல்கள் ஏற்படாமல் ஒருமித்த
செயற்பாடுகளை முன்னெடுக்கலாம். முன்பு குறிப்பிட்ட ஆசிரியர் நியமனங்களிலும் நாம் இதையே
வலியுறுத்தினோம். குறித்தவர்கள் செவி சாய்க்கததால் இறுதியில் நீதிமன்றம் சென்று நியாயம்
பெறவேண்டியதாயிற்று.

உண்மையில் ஒரு நாட்டின் தேசிய கல்விக் கொள்கையானது இன ரீதியிலோ மொழி ரீதியிலோ பிரிக்கப்
படக் கூடாது என்ற அடிப்படைக் கொள்கையிலேயே நாம் தெளிவாக இருக்கின்றோம். ஆனால் பல் சமூக,
பல் இன கட்டமைப்பைக் கொண்டதொரு சூழலில் இவ்வாறான கோரிக்கைகளை முன்னெடுத்து
செயற்படுத்தப் படும் போது அச்சூழலில் ஒன்றாக சேர்ந்து வாழும் இன்னொரு சமூகம் பாதிக்கப் படும்

வேளையில் அந்தப் பாதிப்பிலிருந்து தம்மை மீட்டெடுக்க இவ்வாறு குரலெழுப்ப வேண்டிய நிர்பந்த நிலைக்கு
தள்ளப் படுகின்றோம் என்பதே யதார்த்தமாகும்.
நாட்டின் சில பிரதேசங்களில் இப்படி மொழிரீதியான கல்வி வலயங்கள் நடைமுறையிலுள்ளன. குறிப்பாக
வவுனியா மாவட்டத்தில், சில சிங்களமொழி பாடசாலைகளை இணைத்து தனிக் கல்வி வலயமாக
இயங்குகிறது. தனியான காரியாலயம், தனியான பணிப்பாளர், தனியான சிங்களமொழி மூல
உத்தியோகத்தர்கள் என சகல வளங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதேபோல், திருகோணமலை மாவட்டம், அம்பாறை மாவட்டம் முதலான இடங்களில் சிங்கள மொழிமூல
பாடசாலைகளை இணைத்து தனியான கல்வி வலயங்களாக இயங்குகின்றன.

ஆகவே எமது ஊவா போன்ற பிரதேசங்களுக்கு இந்த விடயம் புதிதான அல்லது ஆச்சர்யமான விடயமாக
இருந்தாலும் மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப சமூகம் சார்ந்த எம்விடயங்களில் நாம் அவதானம் செலுத்தி
தீர்வுகளை பெறவேண்டியது எமது காலத்தின் தேவையாக உள்ளது.
அந்த வகையில் மலையக முஸ்லிம் கவுன்சில் இந்த விடயமாக பல ஆக்கபூர்வமான விடயங்களை
எதிர்காலத்தில் செயட்படுத்த் திட்டமிட்டுள்ளது. இவ்விடயம் சம்பந்தமாக சகோதர தமிழ் அரசியல்
தலைமைகளுடனும் சிவில் சமூக தலைமைகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக
புரட்சித் தமிழ் பேரவையின் தலைவர் பத்மநாதன் அவர்களுடன் இதுவிடயாமாக பேசியதில் எம் பக்க
நியாயங்களுக்கு சார்பான நிலைபாட்டினை கொண்டுள்ளார் என்பது மகிழ்விக்குரிய விடயமாகும்.
இது விடயமாக முஸ்லிம் தேசிய அரசியல் தலைமைகள் , ஊவா முஸ்லிம் கல்வி ஆர்வலர்கள் , உலமாக்கள் ,
அரசியல் /சிவில் சமூக தலைமைகளை ஒன்று கூட்டி ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
மலையக முஸ்லிம் கவுன்சில் முனைப்புடன் செயல் பட்டு வருகின்றது. கட்சி இயக்க கொள்கை பேதங்களை
மறந்து இந்த விடயத்தில் ஒன்றுபட்டு உழைக்க முன்வருமாறு சம்பந்தப் பட்டவர்களை அன்புடன்
அழைக்கின்றோம் .

Post a Comment

0 Comments