Ticker

6/recent/ticker-posts

'நேட்டோ“வையும் “வீட்டோ”வையும் வைத்து உலகையே ஆட்டிக் கொண்டிருந்தவர்களை ஆட்டம் காண வைத்த கொரோனா!



'நேட்டோ“வையும் “வீட்டோ”வையும் வைத்து உலகையே ஆட்டிக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகளை கொரோனா என்ற வைரஸ் இன்று ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது.
யுத்தத்திற்காகவே ஆயுதங்களை உற்பத்தி செய்த யதார்த்தத்தை மாற்றிய இந்த ஆதிக்க சக்திகள். ஆயுதங்களுக்காக வேறு நாடுகளில் யுத்தங்களை உற்பத்தி செய்தன.
ஆயுத பலத்தை பிரயோகித்து அதிகார மமதையில் ஏனைய நாடுகளை சுரண்டி, அடக்கி, ஒடுக்க முயன்ற இந்த ஜாம்பவான்களின் ஜட்டியை கொரோனா கழற்றியிருக்கிறது.
நடு வீதியில் நிறுத்தியிருக்கிறது.
அணுவை காட்டி அரசியல் செய்த இவர்களின் அட்டகாசக் கண்களை, இந்த கண்ணுக்கு புலப்படாத கொரோனா கட்டிப் போட்டு இருக்கிறது.
குண்டு துளைக்காத வாகனங்களுக்குள் தனது உயிர்களை கூடுகட்டி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்ட பென்னாம் பெரிய அதிகார வர்க்கங்களின் அரசியல் கட்டமைப்புகளை எல்லாம் இந்த சின்னஞ் சிறிய கொரோனா சின்னாபின்னமாக்கி வருகிறது.
குண்டுகளையும், குண்டு துளைக்காத வாகனங்களை உற்பத்தி செய்த இந்த ஆதிக்க சக்திகள், கொரோனாவினால் தம்மையும் தமது நாட்டு மக்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் பாிதவித்து நிற்கின்றன.
சாதாரண ஃபேஸ் மாஸ்க் ஐ கூட ஏனைய நாடுகளிடம் பிச்சைக் கேட்கும் கையறு நிலையில் கதிகலங்கி நிற்கின்றன.
போரும் பட்டினியும் இவ்வுலகில் பல மில்லியன் உயிர்களை காவு கொண்டுக் கொண்டிருக்கும் நிலையில்.
அந்த அழிவுகளில் கூட ஆதாயத்தை அள்ளிக் கட்டிக்கொண்டு அரசியல் செய்த இந்த அழிச்சாட்டிய சக்திகள். கொரோனா மரணத்திற்கு மட்டும் குலை நடுங்க காரணம் என்ன?
போரினதும், பட்டினியினதும் மரணங்கள் இவர்களுக்கு ஆதாயத்தை வழங்கக் கூடியன. ஆயுத விற்பனையும் , சுரண்டலும் தான் இந்த அதிகார வர்க்கங்களின் அணி வேர்.
ஆனால் கொரோனா மரணங்கள் அப்படியல்ல, அது நாட்டு மக்களை மட்டும் பதம்பார்த்து விட்டு போய் விட மாட்டாது என்ற உண்மையை இவர்கள் நன்றாகவே புரிந்த வைத்திருக்கிறார்கள்.
ஏவுகணைகள் என்ன? ஈ, எறும்புகள் கூட செல்ல முடியாத ஆதிக்க சக்திகளின் அரியாசனத்தை தொட்டுப் பார்க்கும் வல்லமை இந்த வைரஸுக்கு மட்டும் தான் இருக்கிறது.
உலகையே ஆட்டிக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களை அரியணையிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் அழைத்து வந்து ஐசியூ என்ற அவசர கண்காணிப்பு பிரிவிற்குள் மல்லாக்கப்படுக்க வைக்கும் “மகத்தான” சக்தியை இந்த கொரோனா கொண்டிருக்கிறது.
அதனால் தான் போரின் மரணங்களை விட, பட்டினியின் மரணங்களை விட கொரோனாவின் மரணங்களுக்கு இந்த ஜாம்பவான்கள் அச்சம் கொள்கிறார்கள் ஆடிப்போய் நிற்கின்றார்கள். (Azeez Nizardeen)

Post a Comment

0 Comments