கொரோனா வைரஸ் தொற்று முழு உலகையே ஆட்கொண்டு அச்சுறுத்தி வரும் நிலையில், புனித ஹஜ் பயணத்திற்கான முன்பதிவுகளை தாமதப்படுத்துமாறு இவ்வருட ஹஜ் யாத்திரையில் பங்கேற்க திட்டமிட்டுள்ள முஸ்லிம்களை சவுதி அரேபியா கேட்டுக் கொண்டுள்ளதாக அல் ஜஸீரா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹஜ் விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் முகமது ஸாலிஹ் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஹஜ் யாத்ரீகர்களின் பாதுகாப்பு குறித்து சவுதி அரசு அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உலகம் முழுவதிலிருந்தும் சுமார் இரண்டு மில்லியன் மக்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தில் இஸ்லாத்தின் புனிதமான நகரங்களுக்கான உம்ரா யாத்திரையை சவுதி அரேபியா அரசு நிறுத்தியது, இந்த வகையில் கொரோனா வைரஸ் பரவல் இந்த ஆண்டு ஹஜ் கடமை தொடர்பாகவும் ஒரு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியுள்ளது.

0 Comments