இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்களை கீழே தருகின்றொம்,
இன்றைய அரசாங்கத்தின் கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் கும்பல்களினால் நடத்தப்படும் சில குப்பை இணையத்தளங்களில், "மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி செல்கிறார்" என்ற ஒரு குப்பை செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது.
"இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை (பங்கலுத்) இது காட்டுகிறது" என சுத்தமான சிங்களத்தில், இங்கே நான் கூறுகிறேன். இதை ஏனைய சிங்கள தளங்கள் மற்றும் ஊடகங்கள் பிரசுரித்து வருகின்றன.
"அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே" பாயும் தவளை அல்ல, இந்த மனோ கணேசன்...! நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். சஜித் மீது, நம்பிக்கை வைத்து, நான் பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியும் உறுதியாக பயணிக்கின்றன.
புதிய தேசிய கூட்டணியில் சேரும் போது அல்லது விலகும்போது, கூட, "எடுத்தேன் கவிழ்த்தேன்" என ஒரேயொரு விடயத்தை மாத்திரம் காரணமாக வைத்துகொண்டு, நான் சேருவதும் இல்லை. பிரிவதும் இல்லை.
நான் அப்படி நடந்து கொண்டால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும், இந்நாட்டில் எனக்கு மரியாதை இருக்காது. நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதையை இருக்காது.
இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப இவர்கள் முயல்கின்றனர்...!
இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும், எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டு, ரணில் எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.
இன்று என் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால், நாங்கள் ஒரு கட்சியாக, கூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து அதில் அங்கம் வகிக்கிறோம்.
நாமே உருவாக்கியுள்ள, புதிய தேசிய கூட்டணி ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து விலகும் தேவை எமக்கு இல்லை.

0 Comments