ஆப்கானிஸ்தானின் தலிபான் ஆட்சியாளர்கள் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு நேற்று (20) முதல் தடை விதித்துள்ளனர். நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழகங்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை இதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆளும் கடும்போக்கு முல்லாக்கள் பெண்களின் கல்வி உரிமை மற்றும் அவா்களின் சுதந்திரத்தை தொடர்ந்தும் நசுக்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியபோது, பெண்களின் உாிமைகள் விடயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக உறுதியளித்திருந்தனா். ஏற்கனவே, சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை புறக்கணித்து விட்டு, பெண்கள் தொடா்பான அனைத்து விவகாரங்களிலும் கடும் கட்டுப்பாடுகளை தாலிபான் முல்லாக்கள் விதித்து வருகின்றனர்.
"மறு அறிவிப்பு வரும் வரை பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு உங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி அமைச்சர் நதா முகமது நதீம் கையொப்பமிட்ட கடிதம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஏஎப்பி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 Comments