"உலக அழிவு கடிகாரம்" (Doomsday Clock) காட்டும் தற்போதைய தரவுகள், நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு பேரழிவின் மிக அருகில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
மனிதகுலம் அதன் சொந்த தொழில்நுட்பங்கள், சிந்தனைகள் மூலம் சுய அழிவுக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் குறிக்கும் “டூம்ஸ்டே குளொக்” என்ற உலக அழிவு கடிகாரம் நள்ளிரவு 12 மணியை எட்டுவதற்கு இன்னும் 85 செக்கன்களே இருப்பதாக காட்டியுள்ளது.
இந்த அறிவிப்பு ஜனவரி 27 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.
உலக அழிவு கடிகாரமா...?
அப்படி என்றால் என்ன என்று யோசிக்கின்றீர்களா?
அந்த கடிகாரத்தின் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்!
நாம் கைகளில் கட்டியிருக்கும் கடிகாரம் காலத்தைக் காட்டும்; ஆனால், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணு விஞ்ஞானிகள் நிர்வகிக்கும் இந்தக் கடிகாரம், மனித இனத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் மிச்சமிருக்கிறது? என்பதை மட்டும் காட்டுகிறது.
இது சுவரில் தொங்கும் ஒரு சாதாரணக் கடிகாரமல்ல; மாறாக, உலகம் எத்தகைய பேராபத்தில் சிக்கியுள்ளது என்பதை உணர்த்தும் ஒரு எச்சரிக்கை குறியீடாகும்.
இந்தக் கடிகாரத்தில் ‘நள்ளிரவு 12 மணி’ என்பது உலக அழிவைக் குறிக்கிறது.
கேட்கவே கொஞ்சம் திகிலாக இருக்கிறதல்லவா?
1945-ல் ஜப்பானில் வீசப்பட்ட அணு குண்டுகள் உலகத்தையே அதிரவைத்தன. அணு ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளே அதன் விபரீதத்தை உணர்ந்து, "மனிதன் விழித்துக்கொள்ளாவிட்டால் இந்த உலகமே சாம்பலாகிவிடும்" என எச்சரிக்க விரும்பினார்கள்.
அதன் விளைவாக, 1947-ஆம் ஆண்டு உருவானதுதான் இந்த 'Doomsday Clock'.
இந்தக் கடிகாரத்தில் 'நள்ளிரவு 12 மணி' என்பது உலக அழிவைக் குறிக்கிறது. கடிகார முள் 12-ஐ நோக்கி நெருங்க நெருங்க, மனிதகுலத்திற்கு ஆபத்து அதிகரிக்கிறது என்று அர்த்தமாகும்.
இந்த முள் எப்போதெல்லாம் நகர்த்தப்படுகிறது தெரியுமா?
சும்மா ஒரு ஆர்வத்திற்காக இந்த முட்கள் நகர்த்தப்படுவதில்லை.
உலகை அச்சுறுத்தும் பின்வரும் காரணிகளைக் கொண்டே விஞ்ஞானிகள் இதனைத் தீர்மானிக்கிறார்கள்:
1947-ல் இந்தக் கடிகாரம் முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, நள்ளிரவை அடைவதற்கு 7 நிமிடங்கள் இடைவெளி இருந்ததாக அறிவித்தது.
இன்று உலக நாடுகளுக்கு இடையில் எழுந்திருக்கும் அரசியல் சர்ச்சைகள், போர் வெறி, ஏகாதிபத்திய நாடுகளின் அரக்கத்தனம் மற்றும் இயற்கையின் பேரழிவு காரணமாக, நாம் மரணத்தின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
தற்போது இந்தக் கடிகாரம் நள்ளிரவுக்கு இன்னும் வெறும் 85 செக்கன்களே மிச்சமிருப்பதாகக் காட்டுகிறது!
மனித வரலாற்றிலேயே நாம் இப்போதுதான் பேரழிவிற்கு மிக நெருக்கமான புள்ளியில் நிற்கிறோம்.
"விடியலைத் தேடும் மானுடம், தன் கையாலேயே இருளைத் தேடிக்கொள்கிறதோ?" என எண்ணும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.
இதிலிருந்து மீள இன்னும் வாய்ப்பிருக்கிறது என்பதே இந்த விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
இந்த விஞ்ஞானிகளின் நோக்கம் நம்மைப் பயமுறுத்துவது அல்ல; மாறாக, நம்மைப் படுகுழியில் இருந்து காப்பாற்றுவதற்கான எச்சரிக்கையை இடுவதுதான்.
உலக நாடுகள் ஒன்றிணைந்து போர்களைத் தவிர்த்து, சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தால், இந்தக் கடிகார முள்ளை மீண்டும் பின்னோக்கி நகர்த்த முடியும்.
டிரம்பின் பதவிக்காலம் ஒரு ஆண்டை எட்டியிருக்கும் இந்தச் சூழலில், உலகில் ஏற்பட்டுள்ள அரசியல் சர்சைகளும், ஆக்கிரமிப்புகளும் இந்தக் கடிகாரத்தின் முள்ளை 12-ஐ நோக்கி வேகமாகத் நகர்த்தியிருக்கின்றன.

0 Comments