Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் அடுத்த 'அதிகாரப் பசி'க்கு இரையாகப் போகும் கியூபா!


அமெரிக்காவின் அடுத்த 'அதிகாரப் பசி'க்கு இரையாகப் போகும் கியூபா!

அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க வல்லரசின் அதிகாரத்தை எதிர்த்து நின்றுகொண்டிருக்கிறது, இயற்கை எழில் கொஞ்சும் கரிபியன் கடலின் அலைகளுக்கு நடுவே ஒரு தீவு தேசம்!
அதுதான் கியூபா.

இன்று, அந்தத் தேசத்தின் குரல்வளையை நசுக்கும் நோக்கில், வெள்ளை மாளிகையின் அதிகார மையத்திலிருந்து 'தேசிய அவசர நிலை' என்னும் புதியதொரு அடக்குமுறை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ள கியூபாவுக்கு எதிரான இந்த ஆணையை, ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு 'நிழல் யுத்த' மாகவும் மிகப்பெரும் கொடுமையாகவும் பார்க்க வேண்டியுள்ளது.
எண்ணெய் என்ற எரிசக்தி ஆயுதத்தை ஒரு நவீன கால முற்றுகையாக அமெரிக்கா பயன்படுத்த ஆரம்பித்திருப்பதைச் சமகால உலக அரசியல் நிகழ்வுகள் எடுத்துரைக்கின்றன. பல நாடுகள் மீது, அமெரிக்கா இந்த முற்றுகையைச் சுங்க வரிகளாலும், பொருளாதாரத் தடைகளாலும் நடத்தக் கங்கனம் கட்டிக்கொண்டிருக்கிறது.
கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் நாடுகள் மீது 'வரி விதிப்போம்' என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. கியூபா நாட்டின் மீது உணவு மற்றும் நீர் ஆதாரங்களைத் துண்டிக்கும் 'முற்றுகை' ஒன்றை நடத்தத் தயாராகியுள்ளது.

வெனிசுலாவின் மீதான பிடியை இறுக்கிய கையோடு, இப்போது கியூபாவின் கழுத்தை நெறிக்கத் துடிக்கிறது அமெரிக்கா. கியூபா வெனிசுலாவிலிருந்தே எரிபொருளைப் பெற்று வந்தது. கியூபாவில் 15 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இத்தகைய நெருக்கடியான ஒரு தேசத்தின் மீது, மனிதாபிமானமற்ற முறையில் இந்தத் தடையை விதிப்பது, அமெரிக்கா உலகம் முழுவதும் பீற்றித் திரியும் போலி ஜனநாயகத்தின் முகத்திரையைக் கிழித்துக் காட்டுகிறது.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்குக் கியூபா ஒரு "அசாதாரண அச்சுறுத்தல்" என்று டிரம்ப் ஆணை பிறப்பித்துள்ளார். ஆனால், உலகின் மிகப்பெரிய ராணுவத்தைக் கொண்டுள்ள ஒரு வல்லரசு, கடந்த அறுபது வருடங்களாகப் பொருளாதாரத்தால் நலிவடைந்த ஒரு நாட்டைக் கண்டு அஞ்சுவதாகக் கூறுவது ஒரு பித்தலாட்டமும், முரண்நகையுமாகும்.

உண்மையில், கியூபா முன்வைக்கும் கம்யூனிசக் கொள்கைகளும், அது அமெரிக்காவின் கொல்லைப்புறத்தில் நின்றுகொண்டு அதன் ஆதிக்கத்தை ஏற்க மறுப்பதுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் தூங்கவிடாமல் செய்கிறது. ரஷ்யா மற்றும் சீனாவுடனான உறவைக் காரணம் காட்டி, லத்தீன் அமெரிக்க நாடுகளைத் தனது தனிப்பட்ட சொத்தாகக் கருதும் 'மன்ரோ கோட்பாட்டை' (Monroe Doctrine) மீண்டும் நிலைநிறுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கியூபாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மார்கோ ரூபியோவின் கூற்று, கியூபாவில் 'ஆட்சி மாற்ற' (Regime Change) நடவடிக்கைக்கான சூழ்ச்சியைப் பறைசாற்றுகிறது.

ஒரு நாட்டின் மக்கள் யாரை ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை அந்த மக்களிடமிருந்து பறித்து, பசியாலும் இருளாலும் அவர்களை வாட்டி வதைத்துத் தங்களுக்குச் சாதகமான ஒரு ஆட்சியை அமர வைக்கத் துடிப்பதுதான் அமெரிக்காவின் அகராதியில் ஜனநாயக மீட்பு.

கியூபா மீது திணித்துள்ள பணப்பரிமாற்றம் மற்றும் விமானப் போக்குவரத்துத் தடைகள் மூலம், சாதாரண கியூபா மக்களின் குடும்ப உறவுகளையும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சிதைப்பது ஒரு மனிதாபிமானமற்ற போர்முறையே அன்றி வேறொன்றுமில்லை.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சமதர்மத்தை முழங்கிய பிடல் காஸ்ட்ரோவின் மண்ணில், இன்று மக்கள் இருளிலும் பசியிலும் தள்ளப்பட்டுள்ளனர். அடக்குமுறைகள் அதிகமாகும் போதுதான், விடுதலையின் தாகம் தீவிரமடையும் என்பதை அமெரிக்கா மறந்து செயல்படுகிறது.

சர்வதேசச் சட்டங்களையும், மனித உரிமைகளையும் காலில் போட்டு மிதிக்கும் அமெரிக்காவின் இந்த 'ஏகாதிபத்திய வெறி', கியூபாவை மட்டும் பாதிக்கவில்லை; அது உலக அரங்கில் அமெரிக்காவின் தார்மீக வீழ்ச்சியையே பறைசாற்றுகிறது. 

கியூபாவைச் சுற்றியிருக்கும் கரிபியன் கடலின் அலைகள் இன்னும் ஓய்ந்துவிடவில்லை; அது ஒரு நாள் இந்த ஏகாதிபத்திய திமிரை அடித்து அள்ளிச் செல்லும் மிகப்பெரும் சுனாமியாக எழும் என்பதில் ஐயமில்லை.

Post a Comment

0 Comments