ஊழலுக்கெதிராக குரல் கொடுக்கும் அமைப்பிற்கு 2 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு பொதுநூலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த முறைப்பாடுகள் தொலைநகல், மின்னஞ்சல் மற்றும் தபால் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
அந்தவகையில், மஹிந்தவிற்கு எதிராக 150 முறைப்பாடுகளும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக 200 முறைப்பாடுகளும் அதைதவிர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜொன்ஸ்டன் பெரேரா மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வாறான முறைப்பாடுகள் குறித்து புதிய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், கடந்த 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 2 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments