Ticker

6/recent/ticker-posts

‘அம்மா சிமெண்ட்’ தமிழகத்தில் அறிமுகம்

அம்மா உணவகங்கள், அம்மா குடிநீர்த் திட்டம், அம்மா உப்பு, அம்மா விதைகள், அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அம்மா சிமெண்ட் தற்பொழுது நடைமுறைக்கு வந்துள்ளது.
மூட்டை ஒன்று 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ‘அம்மா சிமெண்ட்’ திட்டம் இன்று திங்கட்கிழமை திருச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான ஐந்து
கிட்டங்கிகளில் இந்த விற்பனை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டம் படிப்படியாக விரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் தமிழ்நாடு முழுவதும் உள்ள 470 கிட்டங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘அம்மா சிமெண்ட்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து மாதமொன்றுக்கு இரண்டு லட்சம் மெட்ரிக் தொன் சிமெண்ட் கொள்முதல் செய்யப்படும். சிமெண்ட் மூட்டைகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து யூனியன்களில் உள்ள 470 கிட்டங்கிகளில் இருப்பு வைத்து, மூட்டை ஒன்றுக்கு 190 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கட்டிட திட்ட வரைபடத்தையோ அல்லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய்துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற்பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன்சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ சமர்ப்பித்த பின்னர் வீடு கட்டுவோர்கள் 100 சதுர அடிக்கு 50 மூட்டைகள் வீதம் அதிக பட்சம் 1500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமெண்ட் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments