இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மத்திய அரசு உணவு தானியங்கள் மீதான மானியம், தொழில் துறைகளை ஊக்குவிக்கும் மானியம் உள்பட அனைத்து மானியங்களையும் பட்ஜெட் தாக்கலின் போது ரத்து செய்ய உள்ளதாக தெரிகிறது.
அவ்வாறு மானியங்களை ரத்து செய்தால் இது இந்திய மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும். தொழில்துறை மானியங்களை ரத்து செய்வதன் முதல் கட்டமாகத்தான் திட்டக்குழுவை கலைத்துள்ளனர்.
மத்திய அரசு மானியத்தை குறைக்கும் பட்சத்தில் மாநில அரசும் குறைக்குமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2009–ம் ஆண்டு மத்திய அரசு 420 தொழில் அதிபர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி மானியம் வழங்கி உள்ளது.
ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் ஏழைகளின் நலனுக்காக வழங்கிய மானியம் ரூ.3 லட்சம் கோடிக்கும் குறைவுதான். எனவே இந்த தவறான கொள்கையை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு போராடும்.
கல்வித்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் உள்ள விஞ்ஞானம், ஜோதிடவியல் பாடங்களை திணிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் கல்வித்துறை 1000 ஆண்டுகளுக்கு பின்னால் சென்று விடும். எனவே மத்திய அரசின் இந்த கொள்கைகளை எதிர்த்து அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சே தோல்வியை தழுவியது அனைவருக்கும் மகிழ்ச்சியைத்தருகிறது. இலங்கை தமிழர்களை திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் புதிய அரசு இப்போது தான் பதவி ஏற்றுள்ளது. இந்த நிலையில் அவர்களுக்கு உரிய உரிமைகள் கிடைத்த பின்னர் தான் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகம் உள்ளது. இதனால் தொழில்துறையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மின்வெட்டை சீர்செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூறுகிறார்கள். அதை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். தமிழக அரசு பொங்கல் பரிசு, பொங்கல் பரிசு பொருட்கள் எதையும் வழங்கவில்லை.
இதற்கு மத்திய அரசின் மானிய குறைப்பு காரணமா? அல்லது தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
வனப்பகுதியில் விடுதிகள் கட்டுவதை தடை செய்ய வேண்டும். மாநில அளவிலான இந்திய கம்யூனிஸ்டு மாநாடு வருகிற 25–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கோவையில் நடைபெறும்.
தேசிய மாநாடு புதுச்சேரியில் மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் 29–ந்தேதி வரை நடைபெறும். தயாநிதிமாறன் வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகள் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளது. ஐ.ஏ.எஸ்.அதிகாரி உமாசங்கர் மத பிரசாரம் செய்வதை கைவிட வேண்டும். எக்காரணம் கொண்டும் பாரதிய ஜனதாவை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம்.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

0 Comments