பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தினத்தையொட்டி வீர தீரச் செயலுக்கான விருது பெற்ற ஒரு சிறுமியின் காதைப் பிடித்து செல்லமாக திருகிய படம் இப்போது வைரலாக மாறியுள்ளது.
அந்த சிறுமியின் பெயர் ரிபா தாஸ். வயது 8. பிரதமர் மோடி இவரது காதைப் பிடித்து செல்லமாக திருகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் பிரதமரின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்தவர் ரிபா தாஸ். தீவிபத்திலிருந்து தனது தம்பியின் உயிரைக் காத்து தீரமாக நடந்து கொண்டார். இதற்காகத்தான் அவருக்கு வீரச் செயலுக்கான விருது கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இவரது வீடு தீவிபத்தில் சிக்கியபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது குட்டித் தம்பியை பத்திரமாக மீட்டு வந்து அசத்தினார் ரிபா தாஸ்.
சம்பவம் நடந்தபோது ரிபா தாஸின் தாயார் ஒரு அறையில் தனது ஒன்றரை வயது மகனுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதைப் பார்த்து பயந்து போன தாயார் வெளியே ஓடி வந்து விட்டார். அறைக்குள் குழந்தை மட்டும் சிக்கிக் கொண்டது. இதையடுத்து அந்த அறைக்குள் பாய்ந்த ரிபா தாஸ் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தனது தம்பியை பத்திரமாக இறுக்கிப் பிடித்தபடி வீட்டை விட்டு ஓடி வந்தார்.
இதுகுறித்த படத்துடன் பிரதமர் வெளியிட்டு்ள்ள டிவிட் செய்தியில், ரிபா தாஸ் என்ற எனது இந்த இளம் தோழியின் செயலை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. இவள் தனது தம்பியை மிகப் பெரிய தீவிபத்திலிருந்து துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளாள் என்று பாராட்டியுள்ளார்.


0 Comments