Ticker

6/recent/ticker-posts

உண்மை ஒருநாள் வெல்லும் - மஹிந்த ராஜபக்ஷ

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடக தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக குற்றச்சாட்டுக்கள் பரப்பப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

வாய்மை என்றாவது ஒரு நாள் வெல்லும் என தான் நம்புவதாகவும் அவர் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். தான் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கடந்த சில
தினங்களாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் குறித்து அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

அதில், “ஜனவரி 9ஆம் திகதி இராணுவ சதி மூலம் ஆட்சியில் நீடிப்பதற்கு முயற்சித்ததாக என் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது. தேர்தல் பெறுபேறுகள் முழுமையாக வெளியாவதற்கு முன்னதாகவே ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடி அலரி மாளிகையில் இருந்து வெளியேறியிருந்தேன்.

சட்டவிரோதமாக ஆட்சியில் நீடிப்பதற்காக அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு பரஸ்பர முரணானது என்பதுடன், அருவருக்கத்தக்க செயலாகும்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டே அலரி மாளிகை நவீனமயப்படுத்தப்பட்டது. மாநாடு நடைபெற்ற காலப் பகுதியில் வெளிநாட்டு அரச தலைவர்களுக்கு அலரி மாளிகையில் வரவேற்பளிக்கப்பட்டதால், அதற்குப் பொருத்தமான முறையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது.

எனது உருவம் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் கடிகாரங்கள், தேனீர் கோப்பைகள், ஸ்டிக்கர், போஸ்டர், பஞ்சாங்கக் கலண்டர் போன்றவை பல்வேறு நபர்கள் வசமிருந்தமை எந்த வகையிலும் குற்றமாகாது.

எனது மனைவி 100 கிலோகிராம் தங்கத்தை மோசடியான முறையில் விற்பனை செய்வதற்கு முயன்றதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸார் பதிலளித்துள்ள நிலையில், அது குறித்து மேலதிகமாக கருத்துக்கூற வேண்டியதில்லை. திறைசேரிக்கு சொந்தமான தங்கத்தை ஜனாதிபதியின் பாரியார் அன்றி திறைசேரியின் செயலாளரினால் கூட இரகசியமான முறையில் விற்பனை செய்யமுடியாது.

எனது புதல்வர்களுக்கு சொந்தமான எந்தவொரு லம்போகினி காரும் எந்தவொரு பகுதியிலிருந்தும் மீட்கப்படவில்லை. எனது குடும்பத்திற்கு சொந்தமான வீட்டுத் தளபாடங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களையும் பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். எனக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலமொன்று கிடைக்கும் வரை அவற்றை குறித்த கொள்கலன்களுக்குள்ளேயே வைத்திருக்கின்றேன்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இருந்த எந்தவொரு அரசாங்கமும் நிறைவேற்றாத அபிவிருத்தித் திட்டங்களை எனது அரசாங்கம் நிறைவேற்றியதை சூறையாடல் என தெரிவித்து அவற்றை குறைத்து மதிப்பிடும் திட்டமொன்று கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டது. சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய நேரத்தில் பதிலளிக்கத் தவறியதை சுய விமர்சனத்தின் மூலம் ஏற்றுக்கொள்கின்றேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments