அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா சென்றபோது, பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த சர்ச்சைக்குரிய "கோட்' குஜராத் மாநிலம், சூரத்தில் இன்று ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து குஜராத் சூரத் மாநகராட்சி ஆணையர் மிலிந்த் தோராவனே பிடிஐ செய்தியாளரிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஒபாமா வருகையின் போது மோடி அணிந்திருந்த கோட், அத்துடன் கடந்த 9 மாதங்களில் மோடி தனது ஆட்சியில் பெற்ற 455 பரிசுப் பொருள்களும் புதன்கிழமை முதல் ஏலம் விடப்படும்.
இந்த ஏலத்தில் திரட்டப்படும் நிதி "கங்கையை தூய்மைப்படுத்தும்' திட்டத்துக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஏலம் எஸ்எம்சியின் அறிவியல் மாநாட்டு மையத்தில் நடைபெறும். சூரத்தில் இந்த ஏலத்தை நடத்த பிரதமர் அலுவலகம் அனுமதி வழங்கியுள்ளது.
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, பரிசுப் பொருள்களை ஏலத்துக்கு விடும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். குஜராத் முதல்வராக அவர் ஓராண்டு பெற்ற பரிசுப் பொருள்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை பெண் குழந்தைகள் கல்விக்கு நன்கொடையாக அளித்திருந்தார் என்று மிலிந்த் தோராவனே தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த மாதம் இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான சந்திப்பின்போது பிரதமர் மோடி அணிந்திருந்த "கோட்' சர்ச்சையை ஏற்படுத்தியது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோட்டை மோடி அணிந்திருந்தார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

0 Comments