தனது சுய அரசியல் இலாபத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விமல் வீரவன்ச பிளவுபடுத்த முனைவதாக தெரிவித்துள்ளார் கடுவல நகரபிதா புத்ததாச. கடந்த அரசில் புத்ததாசவைக் கொண்டு தனக்கெதிராக மஹிந்த ராஜபக்ச சதித்திட்டம் தீட்டுவதாக விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கட்சிக்குள் பிளவை உருவாக்க விமல்
முனைவதாக புத்ததாச குற்றஞ்சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தை மீறி மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் இழுத்து வருவதற்கான அழுத்தங்களைத் தரும் விமல் வீரவன்ச அதற்காக 18ம் திகதி நுகேகொடயில் பொதுக்கூட்டம் ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளதுடன் புதிய அரசியல் கூட்டணி அமைத்துச் செயற்படவும் தயாராகி வரும் நிலையிலேயே இக்குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
முன்னதாக மஹிந்த ராஜபக்ச பெற்றுக்கொண்ட 58 லட்சம் வாக்குகள் அவருக்கான தனிப்பட்ட வாக்குகளன்றி கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments