வாழைச்சேனை கடதாசி ஆலையானது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பாரிய தொழிற்சாலையாகும். இது பல உற்பத்தி விருதுகளை வென்ற ஒரு தொழிற்சாலையாகும். வாழைச்சேனை கடதாசி ஆலையில் 1952ல் நிர்மாணிக்கப்பட்டு 1956ம் ஆண்டு கடதாசி உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிழக்கிலங்கை கடதாசி கூட்டுத்தாபனம் என பெயரிடப்பட்டிருந்தது. அக்காலத்தில் 3000 உழியர்கள் வேலை செய்த இடமாகவும் காணப்பட்டது. தற்போது 300 பேர் வேலை செய்யும் இடமாக இது மாற்றம் பெற்றுள்ளது.
கடந்த கால பயங்கரவாத நடவடிக்கைகளின் தாக்கத்தினால் பல்வேறு சிக்கல்களை இக்கடதாசி ஆலை எதிர்நோக்கி இருந்தது. அதன் பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக கட்சியின் அரசாங்கத்தினால் இதனை புனரமைப்பதற்காகவும் அது தொடர்பான விடயங்களை முன்னேற்றுவதற்காகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தவிசாளர் ஒருவர் தேசமான்ய மங்கள சி செனரத் இக்கடதாசி ஆலைக்கு நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றவுடன் இக்கடதாசி ஆலையில் பல்வேறு குறைபாடுகளை இனம் கண்டார். கொதி நீராவி இயந்திரத்தை திருத்துதல், கடதாசி, காட்போட் இயந்திரத்தை திருத்துதல், தண்ணீர் சுத்திகரிப்பு, இயந்திரத்தை திருத்துதல், கடந்தகால மின்சார நிலுவைகளை செலுத்துதல், கடதாசி ஆலையின் மூலப்பொருளான கழிவுக்கடதாசி பொருட்களை பெறுதல், அதற்கான இரசாயன பொருட்களை கொள்வனவு செய்தல் என பல்வேறு சவால்களை எதிர்கொண்டார்.
தேசமான்ய மங்கள சி செனரத் அவர்கள் தனது சொந்த செலவில் நான்கு நாடுகளுக்கு விஜயம் செய்து இக்கடதாசி உற்பத்தி தொடர்பான பூரண அறிவை பெற்றார். அதன் பின்னர் இந்தியாவிலிருந்து சில நிபுணர்களை கொண்டுவந்து இதனை இயக்கலாமா? இல்லையா? என்ற முடிவை கேட்டதற்கு அதற்கு அவர்கள் இது ஜேர்மனியின் வோயிட் மெசின் ஆயுட்கால உத்தாரவாதமுடையது இதனை இயக்கலாம் என்ற முடிவை தெரவித்தனர்.
அவர் பல்வேறு பட்ட தரப்பினருடன் சேர்ந்து அரச மட்டத்திலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு, ஒரு குழுவை அரசவளங்கள் முயற்சியாண்மை அமைச்சின் உதவியுடன் நியமித்தார். அக்குழுவின் விதந்துரைகளுக்கமைவாக அங்குள்ள மின்சாரம் கூடுதலாக பயன்படுத்தக்கூடிய மோட்டர்களை மாற்றி மின்சக்தி குறைவாக பயன்படுத்தக்கூடிய மோட்டர்களை மாற்றுவதன் மூலம் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என்ற நிபந்தனைக்கமைவாகவும் பாவனைக்குதவாத இரும்பு பொருட்களை விற்பது எனவும் முடிவு எட்டப்பட்டதற்கமைவாகவும் அங்கு பழைய இரும்புபொருட்கள் விற்பனை இடம்பெற்றது.
இக் கேள்விப்பத்திரத்தில் சில அரசியல் சக்திகள் மோசடி செய்து தனக்கு தருமாறு கோரியது. ஆனால், அதற்கு தேசமான்ய மங்கள செனரத் மறுத்தார். அது சட்டப்படியான முறையில் இடம்பெற வேண்டும் எனவும், கடதாசி ஆலைக்கு கூடுதலான வருமானம் வர வேண்டும் என்றும் அவர் கூறினார். இரும்பு விற்பனையின் போது இடம்பெற்ற சகல வருமானங்களும் வாழைச்சேனை கடதாசி ஆலையின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
பின்னர் அடிக்கடி பிரச்சினை தந்து உற்பத்தியை பாதிக்கும் கொதிநீராவி இயந்திரத்தை திருத்துவதினூடாக உற்பத்திகளை மேம்படுத்த முடியும் என்ற முடிவுக்கு வந்தததன் பயனாக கொதிநீராவி இயந்திரத்தை திருத்துவதற்கான கேள்விப்பத்திரம் கோரப்பட்டு குறைந்த செலவில் அது திருத்தப்பட்டு இன்றுவரை மிகவும் சிறப்பாக இக்கொதிநீராவி இயந்திரம் இயங்கி வருகின்றது.
இக்கடதாசி கம்பனியில் காட்போட் சம்பந்தமான உற்பத்திகள் நடைபெறுகின்றன. மீண்டும் கடதாசி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு கருத்திட்டத்தை வரைந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் இதனை கையளித்த போது அவர் 440 மில்லியன் தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில் அவருடைய ஆட்சி முடிவாகியது.
ஆனால் முன்னர் கடமையாற்றிய இக்கடதாசி கம்பனியின் தவிசாளர்கள் இதனை இழுத்து மூடுதவதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர் என்பது பலரும் அறிந்த விடயம். அத்துடன் வாழைச்சேனை கடதாசி கம்பனியின் தலைமை காரியாலயத்தை விற்றனர். ஆனால் இவருடைய காலப்பகுதியில் கிருலப்பனையில் தலைமைகாரியாலம் ஒன்று மிகவும் குறைந்த செலவில் தவணைக்கட்டணத்தின் அடிப்படையில் ஒரு புதிய கட்டிடம் நிறுவப்படுகின்றது. அது மாத்திரமன்றி தலைமை காரியால உத்தியோத்தர்கள் வாழைச்சேனை கடதாசி கம்பனியின் உற்பத்திலேயே சம்பளம் பெறுகின்றனர். அவர்களுக்கு என்ன கஷ்டமான வேலை அங்கு இருக்கின்றது. என்ற குற்றச்சாட்டு வாழைச்சேனை கடதாசி கம்பனி உழியர்களால் முன்வைக்கப்பட்டது.
அதனை கருத்திட் கொண்ட தேசமான்ய மங்கள சி செனரத் அவர்கள் தலைமை காரியாலய ஊழியர்களுக்கு சம்பளத்தை அவர்களே உழைத்து பெறுவதற்காக அப்பியாசக்கொப்பிகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்வதினூடாக வருகின்ற இலாபத்திலிருந்து அவர்கள் சம்பளம் முறையை மேற்கொண்டார். விசேட அனுமதியின் கீழ் கடதாசி கம்பனிக்கு மின்சாரத்தை துண்டிக்காமல் பழைய மின்சார நிலுவைகளை செலுத்துவதற்கான பொறிமுறைகளை கையாண்டது அவருடைய ஆளுமையை வெளிக்காட்டியது.
கடதாசி கம்பனியில் 343 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகின்றது. அங்கிருக்கும்; நில வளத்தை பயன்படுத்துவனூடாக இப்பிரதேச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இதற்காக வாழைச்சேனை கடதாசி ஆலை நிலப்பரப்பில் ஒரு கைப்பை தொழிற்சாலை ஒன்றை அரச அங்கீகாரத்தோடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அத்துடன் நீரை சுத்திகரித்து போத்தல்களில் அடைத்து அதனை வழங்குவதற்காக கருத்திட்டங்களை வரைந்தார். இப்பிரதேசத்தில் பல அரசஉத்தியோகத்தர்கள் தமது சிறு பிள்ளைகளை கொடுத்து விட்டு செல்ல முடியாமல் கஷ்டப்படுதவனை அறிந்து காகித ஆலை வளாகத்தினுள் சிறுபிள்ளை பகல் பராமரிப்பு நிலையத்தை கட்டுவதற்கான கருத்திட்டத்தையும் தீட்டியிருந்தார்.
ஆனால் அங்குள்ள நில வளத்தை சில அரசியல் சக்திகள் தமது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்த முற்பட்ட போது இவற்றுக்கான தடைகள் ஏற்பட்டன. இருந்த போதிலும் இவ்விடயம் தொடர்பாக தனது அயாராத முயற்சியினால் இவற்றுக்காக செயற்றிட்டத்தை செய்வதனை அவர் இடைநிறுத்த வில்லை. அதற்காக ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வேண்டி நின்றார்.அரசாங்கத்துடன் ஒத்தும் இயங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இக்கடதாசி கம்பனியை தொடர்ச்சியாக மூன்று வருடகாலம் தனது பதவிகாலத்தில் எதுவித சம்பளமும் பெறாமலும் அரச வாகனங்கள் பெறாமலும் கடமையாற்றிய தேசமான்ய மங்கள செனரத் அவர்களுக்கு தொடர்ச்சியாக சம்பளத்தை ஊழியர்களுக்கு கொடுப்பதற்கு திறைசேரியின் ஒத்துழைப்பு குறைவாக காணப்பட்டது. இப்பிரதேச அரசியல் சக்திகளின் சதித்திட்டங்கள். வேலைசெய்யும் நபர்களின் பூரண ஒத்துழைப்பின்மை காரணமாக தொடர்ந்து இதனை கொண்டு செல்ல முடியாமைக்கான காரணங்களாக குறிப்பிடலாம்.
இவர் இக்கடதாசி கம்பனியை பொறுப்பேற்கையில மாதந்த உற்பத்தி 38 மெட்ரிக் தொன்னாகவும் கம்பனியின் வங்கி கணக்கில் ரூபா 12574 தொகையே காணப்பட்டது. பின்னர் இத்தொகையை அண்ணளவாக 319 மெட்றிக் தொன்னாக மாற்றியதோடு 3.4 மில்லியன் வருவாய் தந்த இக்காகித தொழிற்சாலை 16 மில்லியன் வருமானம் ஈட்டும் ஒரு இலாப தொழிற்சாலையாக மாற்றுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அத்துடன் 25 வருடங்களின் பின்னர் முஸ்லிம் நபர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டது. மற்றும் தமிழ் சகோதரர்களுக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டன. இவர் இன மதம் பேதம் பாராது சேவையாற்றிய நபர் என்பதை இவ்விடயங்கள் பறைசாற்றுகின்றன. அது மாத்திரமன்றி கல்குடா பிரதேசத்தில் பாடசாலைகளுக்கும், முன்பள்ளிகளுக்கும் கூட தனது சொந்த செலவில் அப்பியாசக்கொப்பிகளை இலவசமாக வழங்கினார். சில பாடசாலைகளுக்கு கணணி இயந்திரத்தையும், பண உதவிகளையும் வழங்கினார். அதுமாத்திரமன்றி இப்பிரதேச மக்களின் தற்போதைய மிகவும் சிக்கலான பிரச்சினை சுத்தகரித்த குடிநீரை பெறுவது.இதற்கு தேசமான்ய மங்கள சி செனரத் அவர்கள் இப்பிரதேச மகளிர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் வேண்டுகோளை பெற்று அதனடிப்படையில் ஜப்பானின் ஜெயிக்காக கருத்திட்டத்தின் கீழ் அதனை செய்வதற்கு அவர்களை கொண்டு வந்து பார்வையிட்டுனர்.அவர்கள் இரண்டு மில்லியன் டொலர் செலவில் அதனை நிறுவதற்கான சகல ஒப்பந்தங்களுக்கான கருத்தாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் இப்பிரதேசத்தைவிட்டு சென்றாலும் இவருடைய சேவை மக்களின் மனதில் தடம் பதித்துள்ளது.
இவர் தற்போதைய ஒரு அரசியல் வாதியின் அழுத்தம் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றுவிட்டார். தற்போது வாழைச்சேனை கடதாசி கம்பனியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்பத்திகள் இல்லை. ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் கடும் கஸ்டப்படுகின்றனர். ஊழியர்களுடைய வாழ்க்கை மிகவும் கஸ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.மீண்டும் கடதாசி கம்பனியின் குடும்பத்தின் கண்ணீரை துடைப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
(ஓட்டமாவடி நிருபர்)

0 Comments