ஜனக்க பண்டார மற்றும் சசித பிரியங்கர ஆகிய பல்கலைக்கழக மாணவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரிலேயே கொலை செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தக் கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த மாணவர்கள் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி அதிகாலையில் கொலை செய்யப்பட்டனர்.
இந்த மாணவர்களின் தலை இறுக்கமாக வைக்கப்பட்டு கனமான பலகை அல்லது இரும்பு ஒன்றினால் தாக்கி தலையை நசுக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் கொலைக்கு சுத்தியல் போன்ற ஏதேனும் ஒன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் அந்த தகவல் தெரிவிக்கின்றது.
இந்த கொலைகளுக்கான திட்டத்தை வகுத்தவர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியவர் எனவும் அவர் இராணுவத்தில் உயர் பதவியை வகித்தவர் எனவும் கூறப்படுகிறது. எனினும் அந்த நபர் உரிய இராணுவப் பயிற்சிகளை பெறாதவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் இந்த மாணவர்கள் தாம் தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேறி சென்ற போது வழியில் காத்திருந்த குறித்த நபர் உள்ளிட்ட குழுவினர் கம்பஹா அரச அதிபரின் அலுவலகத்திற்கு 500 மீற்றர் தூரத்தில் உள்ள மிரிஸ்வத்த சந்தி பிரதேசத்தில் காட்டு பகுதி ஒன்றுக்கு அருகில் வீதியை மறிந்து மாணவர்களை பிடித்துச் சென்றனர்.
தலையில் கடுமையாக தாக்கி கொலை செய்த பின்னர் கண்டி வீதியின் இம்புல்கொட பிரதேசத்தில் சடலங்களை கொண்டு சென்று போட்டுள்ளனர்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிய கொலை திட்டத்தை வகுத்த நபரின் சொந்த பிரதேசம் பெலியத்த பகுதியாகும். அங்குள்ள ஹெலஹெல தியரேதும தெஹிவத்தை என்ற கிராமத்தை சேர்ந்த இந்த நபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்றவராவார்.
மகிந்த ராஜபக்ச தலையிட்டு இந்த நபரை சிறையில் இருந்து விடுவித்துள்ளதுடன் அவருக்கு மேஜர் பதவியும் வழங்கியுள்ளார். மகிந்த ராஜபக்ச பொறுப்புக் கூறவேண்டிய குற்றச் செயல்களை இந்த நபரே மேற்கொண்டு வந்தார் எனவும் அந்த சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது.

0 Comments