Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டிக்கப்படவில்லை: கோத்தபாய ராஜபக்ச

தமது பணிகளை ஈடுசெய்ய எவருக்கும் முடியாது என்று முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்தித்தாளுக்கு அளித்த செவ்வியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம் அரசியல்வாதி அல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், அரச சேவையாளராகவே தாம் பணியாற்றியதாக கூறியுள்ளார்.
தமது கடும் உழைப்பு மற்றும் பணிகளை ஈடுசெய்ய எவராவது நினைத்தால் இது முடியாத காரியம் என்றும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தாம் மாலைதீவுக்கு சென்றதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.  ஜனாதிபதி தேர்தல் முடிந்தது முதல் தாம் இலங்கையிலேயே தங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் பாதுகாப்பு அமைச்சின் வங்கிக் கணக்கில் தமது பெயரில் பெருந்தொகை பணம் இருந்ததாக அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளமையை கோத்தபாய மறுத்துள்ளார்.
புலனாய்வுத்துறையினரால் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவே கே.பி என்ற குமரன் பத்மநாதனை அரசாங்கம் வித்தியாசமான முறையில் நடத்தியதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
அவரை, இராணுவ புலனாய்வின் கண்காணிப்பின்கீழ் நடமாடச் செய்வதன் மூலமே விடுதலைப்புலிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்டுபிடிக்க முடியும் என்ற அடிப்படையிலேயே தமது செயற்பாடு இருந்தாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தவறு செய்த அமைச்சர்களை உரிய நேரத்தில் தண்டிக்காமை காரணமாகவே, மக்கள் மத்தியில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனது என்ற கருத்தை கோத்தபாய ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் அது தமது பணியல்ல என்று கூறியுள்ள அவர், தாம் தமது பணிகளை ஒழுங்காகவே மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் கோத்தபாய சிரித்துக் கொண்டே குறிப்பிட்டதாக ஆங்கில இதழ் கூறியுள்ளது.

Post a Comment

0 Comments