இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் கவனத்தை ஈர்ப்பதற்காக திங்களன்று கிளிநொச்சி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்ட காணாமல் போனோர் உறவினர்களின் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பல தரப்பட்டவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்பும் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தில் தீர்வு கிட்டவில்லை என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டு, புதிய ஜனாதிபதி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் முன்னர் அரச செயலகம் அமைந்திருந்த இடத்திற்கு எதிரில் ஏ9 வீதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
பின்னர் அங்கிருந்து புதிய அரச செயலகத்திற்கு ஊர்வலமாகச் சென்ற காணாமல் போனோரின் உறவினர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரை கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் கையளித்தனர்.
வடமாகாண முதலமைச்சருக்கான மகஜர் இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் கையளிக்கப்பட்டது.
காணமால் போனவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை, விசாரணைகளின்றி நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதிக்கு எழுதப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)
0 Comments