நாட்டில் நடைபெற்ற பாரியளவிலான ஊழல் மோசடிகளின் முதன்மைச் சூத்திரதாரி வேறு யாருமல்ல. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற லஞ்சு, ஊழல் ஒழிப்புக்கான அமைப்பின் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.
நான் கடந்த ஏழு வருடங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவன் என்ற வகையில் என்னால் இதனைத் தெளிவாக கூறமுடியும். தற்பொழுது, நாட்டை விட்டு வெளியேறிய பசில் ராஜபக்ஷதான் கடந்த அரசாங்கத்தின் எல்லா ஊழல்களுக்கும் காரணம். மஹிந்த ராஜபக்ஷ சுத்தவாளி என பேச ஆரம்பித்துள்ளனர்.
நாட்டை விட்டு வெளியேறியவரின் மேல் அனைத்துக் குற்றச்சாட்டையும் போட்டுவிட்டு உள்ளவரை சுத்தமாக்க முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. லஞ்ச ஊழல் முறைப்பாடுகளை விசாரிக்க இந்த நாட்டில் உள்ள சாதாரண சட்டங்கள் போதாமல் உள்ளன. விசேட சட்டங்கள் கொண்டுவரப்படல் வேண்டும்.
கடந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவும் லஞ்ச ஊழலை ஒழிப்பதாக கூறியே ஆட்சிக்கு வந்தார். அவரும் ஜனாதிபதியானவுடன் லஞ்ச ஊழல் முறைப்பாடுகளை முன்வைத்தார். இருப்பினும் அவரினால் பாடசாலை அதிபர் ஒருவரையே அவரது ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஊழல் தொடர்பில் கைது செய்ய முடிந்தது. இதுபோன்ற நிலைமை இந்த அரசாங்கத்துக்கும் வந்துவிடக் கூடாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

0 Comments