இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய குடியரசு தினவிழாவுக்கு சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவின் ஒருமைப்பாடு பற்றி புகழாரங்களை சூட்டியிருந்தார்.
இந்நிலையில், வாஷிங்டனில் நேற்று அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு கருத்தரங்கில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கில் அதிபர் ஒபாமா பேசும்போது, ''அழகான, அற்புதமான ஒரு நாடு இந்தியா. இந்தியாவுக்கு கடந்த மாதம் நான் சென்றிருந்தேன். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் நாடு இந்தியா. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகள் காரணமாக ஒரு மத நம்பிக்கைகளை கொண்ட மக்கள் மற்ற மத நம்பிக்கைகளை பின்பற்றும் மக்களை குறி வைத்து விமர்சிக்கப்படுகிறது.
அங்கு, சமய சகிப்புத்தன்மை குறைந்திருக்கிறது. சமாதானத்தை விரும்பிய மகாத்மா காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரை இந்த சூழ்நிலை அதிர்ச்சியடைய செய்திருக்கும். நம்பிக்கையே நம்மை சரியாக செயல்பட வைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், அதே நம்பிக்கை சில நேரங்களில் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவது வருந்தத்தக்கது. பாகிஸ்தான் பள்ளிகளில் இருந்து பாரீஸ் வீதிகள் வரை இதுபோன்ற நம்பிக்கையில் தீவிரமாக இருப்பவர்களே வன்முறையையும், தீவிரவாதத்தையும் தோற்றுவிக்கிறார்கள்" என்று கூறினார்.
இந்தியாவில் மத சுதந்திரம் குறைந்திருப்பதாக ஒபாமா சுட்டிக்காட்டி பேசியிருப்பது தற்போது இந்தியா்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

0 Comments