Ticker

6/recent/ticker-posts

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,075 ஆக உயர்வு, 20 ஆயிரம் பேர் பாதிப்பு

இந்தியா  முழுவதும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது. 20 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். 
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ராஜஸ்தான், மராட்டியம், உத்தரபிரதேசம், காஷ்மீர், மேற்கு வங்காளம், உத்தரகாண்ட், ஒடிசா மாநில மக்கள் பன்றிக் காய்ச்சலால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் இந்த நோய் பரவியுள்ளது. 

இந்த கொடியநோய் தற்போது தமிழகத்திலும் காலூன்றி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான அளவு மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் இந்த நோய்க்கு 5,528 பேர் பாதிக்கப்பட்டும், 261 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் இந்த நோய்க்கு 4,614, பேர் பாதிக்கப்பட்டும், 275 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். அகமதாபாத் நகரில் மட்டும் மேலும் 10 பேர் இந்நோயிக்கு பலியாகினர். மத்திய பிரதேசத்தில் இந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் 1,010 பேர். உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 153 ஆகும்.

மராட்டியத்தில் இந்த நோய்க்கு 1,735  பேர் பாதிக்கப்பட்டும், 143 பேர் பலியாகியும் இருக்கிறார்கள். தெலுங்கானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தலா 57 மற்றும் 42 பேர் பலியாகினர். தேசிய தலைநகர் டெல்லியில் 10 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,891 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகம் மாநிலத்தில் 46 பேர் பலியாகியுள்ளனர். அரியானாவில் 21 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், இமாச்சல பிரதேசத்திலும் 8 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் 7 பேரும் பலியாகியுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேற்கு வங்காளம் மாநிலத்தில் 16 பேருக்கு பாதிக்கப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் 8 பேர் பலியாகினர் என்று மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் 614 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Post a Comment

0 Comments