இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது.
இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது.இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.
புதிய திருத்தங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
மேலும் வரும் செவ்வாய்க்கிழமை தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பில் ஒரு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
இலங்கையயில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை அகற்றப்பட்டு, ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றமும் சேர்ந்து நிர்வகிக்கும் ஆட்சி முறையாக இலங்கை மாறும்,
இனி இலங்கையில் அனைத்து தேர்தலிலும் விகிதாசார முறை நீக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றிபெற்றவர் என்ற முறை கடைப்பிடிக்கப்படும்.
ஒருவர் அதிகபட்சமாக இரண்டு ஆட்சிக்காலத்துக்கு மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என்ற நிபந்தனை மீண்டும் கொண்டுவரப்படுகிறது.
ஜனாதிபதியின் ஓர் ஆட்சிக்காலம் என்பது ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்படும்.
நாடாளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு கடந்துவிட்ட பின்னர், அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்காது. ஒரு நாடாளுமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னர்தான் அதனைக் கலைக்கும் உரிமை மறுபடியும் ஜனாதிபதிக்கு வரும்.
ஒருவர் ஜனாதிபதியாக இருக்கும்போது அவர் உத்தியோகபூர்வமாக செய்யும் காரியங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு இருந்துவருகின்ற சட்டத் தடை அகற்றப்படும்.
இலங்கையில் அதிகபட்சமாக 30 பேரே அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்களாகவும், அதிகபட்சமாக 40 பேரே துணை அமைச்சர்களாகவும் என ஆக மொத்தம் 70 பேரே அமைச்சர்களாக இருக்க முடியும் என்ற வரம்பு ஏற்படுத்தப்படுகிறது.
17ஆம் அரசியல் சட்டத் திருத்தம் மீண்டும் நடைமுறைப்படும்.
நாட்டின் ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியால் அல்லாமல் சுயாதீனமான முறையில் மீண்டும் தெரிவுசெய்யப்பட வேண்டும் என்றும் இந்தத் திருத்தம் அமையும்.
ஆனாலும், அமைச்சரவையின் தலைவராகவும், முப்படைகளின் தலைமைத் தளபதியாகவும் தொடர்ந்தும் ஜனாதிபதியே விளங்குவார்.
பிரதமரையும் அமைச்சர்களையும் நியமிக்கும் அதிகாரம் தொடர்ந்து ஜனாதிபதிக்கு இருக்கும்.

0 Comments